பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் இன்று தேசிய இருதய கழகத்திலிருந்து (ஐஜேஎன்) இருதய சிகிட்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு அக்கழகத்தில் சிகிட்சை பெற்ற மகாதிர் இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
93 வயதான மகாதிர் கடந்த வெள்ளிக்கிழமை ஐஜேஎன்னில் சிகிட்சைக்கு சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக அவரது பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த திங்கள்கிழமை அவரை ஐஜெஎன்னுக்கு சென்று கண்ட பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் மகாதிர் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக கூறினார். தான் ஒரு மருத்துவர் அல்ல. ஆனால் கட்சி தலைவர். கட்சியின் விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள பல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, மகாதிர் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மகாதிரிடம் கூறியதாக முகைதின் யாசின் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்ற முறையில் கடந்த சில மாதங்களாக மகாதிர் நாடுதழுவிய அளவில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்தார்.