லங்காவியை மேம்படுத்த ரிம1.3 பில்லியன் ஒதுக்கீடு, நஜிப் அறிவிப்பு

 

லங்காவியில் 11 ஆவது மலேசியத் திட்டத்தின் (11எம்பி) கீழ் ஐந்து புதிய திட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் ரிம1.315 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் நஜிப் இன்று அறிவித்தார்.

லங்காவி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் (ரிம500 மில்லியன்), சுகாதார பணியாளர்களுக்கு வீடுகள் (ரிம135 மில்லியன்), பாடாங் மாட்சிராட்டில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையமும் வீடுகளும் (ரிம30 மில்லியன்), ஜாலான் புலாதான் லாப்பாஙான் தெர்பாங் புலாபோல் லங்காவி தரம் உயர்த்தல் (ரிம50 மில்லியன்) மற்றும் நீர் விநியோகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு (ரிம600 மில்லியன்) ஒதுக்கப்படும் என்று நஜிப் அறிவித்தார்.

நான்காவது தொழிற்புரட்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மலேசியன் மலாய் சேம்பர்ஸ் ஆப் கொமர்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நஜிப் இதனைக் கூறினார்.

இத்திட்டங்கள் லங்காவி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான பிஎன் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டை நிரூபிக்கிறது என்றாரவர்.

மக்கள் பின்நோக்கி பார்க்கவோ, உணர்ச்சிபூர்வமான அடிப்படையில் அவர்களுடைய வாழ்க்கையை தொடர்ந்து நடத்தவோ கூடாது என்று நஜிப் கூறினார்.

மக்களின் நல்வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் உருமாற்றம் செய்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு உறுதியான மற்றும் வலுவான அரசாங்கம் தேவைப்படுகிறது, ஒரு தனிப்பட்ட மனிதரின் கீர்த்தியால் அதைச் செய்ய இயலாது என்றும் நஜிப் கூறினார்.

ஒரு வலுவான கட்சியின் ஆதரவு இல்லாமல் ஒரு தனிப்பட்ட மனிதர், எவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தாலும், மாற்றங்களை கொண்டுவர முடியாது என்பதை வலியுறுத்திய நஜிப், கெடா மாநில மக்கள் முன்பு நடந்ததைப்போல் மீண்டும் எதிர்க்கட்சி ஆட்சிக்கு திரும்பக்கூடாது என்றார்.

மத்திய அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் நாம் அந்தக் காலத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும். அந்தக் காலத்திற்கு நாம் செல்லக்கூடாது. நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றார் நஜிப்.