14வது பொதுத் தேர்தலில் எதிரணியிடம் மின்வெளிப் போரில் தோற்றுப்போக அம்னோ/பிஎன் தயாராக இல்லை.
எனவே, 191 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள ஐடி மற்றும் சமுக ஊடக அதிகாரிகள் எதிரணியினரின் இணையவெளித் தாக்குதல்களை முறியடிப்பதற்குத் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அம்னோ தகவல் தொழில்நுட்ப(ஐடி)ப் பிரிவுத் தலைவர் அஹமட் மஸ்லான் கூறினார்.
“மின்வெளியில் பாரிசான் நேசனல் (பிஎன்) எப்போதும் ‘ரெட் பீன் இராணுவ’த்திடம் தோற்றுப்போவதாகக் கூறப்படுகிறது. அதனால் நமது இயந்திரம் பொய்களையும் அவதூறுகளையும் அம்பலப்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முறியடிக்க வேண்டும்”, என்றவர் பெர்மாத்தாங் பாவ் ஐடி பிரிவுகளுக்கு நேற்று விளக்கமளித்தபோது கேட்டுக்கொண்டார்.
அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சருமான மஸ்லான், ஐடி பிரிவுகள் 18 மாதங்களுக்குமுன் ஏற்படுத்தப்பட்டவை என்றும் அவை பொய்யான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் என்றும் கூறினார்.