நஜிபுடின் விலகிய பின்னர் ஹார்வஸ்ட் பங்குகள் வீழ்ச்சி

ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பெர்ஹாட்டின் முக்கிய பங்குதாரரான முகமட் நஜிபுடின் நஜிப் நேற்று அதன் இயக்குநர் பதவியைத் துறந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அதன் பங்கு விலைகள் சரிந்தன.

இன்று காலை புர்சா மலேசியா பங்குச் சந்தையில் வாணிகம் தொடங்கிய போது அதன் பங்கு விலை 98 சென் -னாக விழுந்தது. அது நேற்றைய விலையான 1 ரிங்கிட் 40 சென் – னுடன் ஒப்பிடுகையில் 42 சென் சரிவாகும்.

ஹார்வஸ்ட் நிர்வாக வாரியத்தில் செய்யப்படும் மாற்றங்களின் ஒரு பகுதியாக நஜிபுடின் நிர்வாகம் சாராத இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாக நேற்று புர்சா மலேசியா இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு கூறியது.

என்றாலும் நஜிபுடின், அந்த நிறுவனத்தில் 3,982,000  சாதாரணப் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருப்பதாக அது குறிப்பிட்டது. அவை ஹார்வஸ்ட் நிறுவனத்தில் உள்ள மொத்தப் பங்குகளில் 1.7 விழுக்காடு ஆகும்.

தி ஸ்டார் நாளேட்டின் வர்த்தகப் பகுதியில் நஜிபுடின் மற்றும் அவரது வர்த்தகப் பங்காளியான ரேமண்ட் சான்  ஆகியோரது பேட்டிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

வெட்டு மரங்களைப் பதனீடு செய்வதை அடிப்படையாகக் கொண்ட அந்த நிறுவனத்திலிருந்து  அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு விலகப் போவதில்லை என அந்தப் பேட்டியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“நாங்கள் இந்தக் குழப்பத்தில் எங்கள் பங்குகளை விற்கப் போவதில்லை. நான் எனது 15.7 விழுக்காட்டையும் நஜிபுடின் 2.2 விழுக்காட்டையும் தொடர்ந்து வைத்திருப்போம்,” என சான் கூறினார்.

“ஹார்வஸ்ட்டில் எங்கள் ஆதாயத்தை எடுத்துக் கொண்டு வெளியேறப் போவதாக மக்கள் எண்ணக் கூடாது. மக்கள் கதைகளை உருவாக்கி பங்கு விலையை உயர்த்தக் கூடாது.”

“நாங்கள் உண்மையில் வர்த்தகம் செய்ய வந்துள்ளோம்.”

ஹார்வஸ்ட் பங்குகள் மீது ஊக வாணிகம் தொடருவதால் தாம் விலகுவதற்கு  முடிவு செய்ததாக நஜிபுடின் கூறினார்.

அந்த நிறுவனப் பங்குகள் உயருவது குறித்து தாங்கள் குழப்பம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறிக் கொண்டனர்.

1Green Enviro Sdn Bhd, Magna Healthcare Sdn Bhd, Cahaya Pedoman Sdn Bhd, Tribus Sdn Bhd ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியையும் நஜிபுடின் வகிப்பதாக புர்சா மலேசியா நேற்று விடுத்த அறிவிப்பு  தெரிவித்தது. அது தவிர அவர் Kingtime International Ltd, Dynac Sdn Bhd ஆகியவற்றில் இயக்குநராகவும் இருக்கிறார்.