யுனிவர்சிடி இஸ்லாம் அந்தராபங்சா (யுஐஏ), உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லாவும் மாணவர்களும் கலந்துகொள்ளவிருந்த ஒரு கலந்துரையாடலை இறுதிநேரத்தில் ரத்துச் செய்தது. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் சட்டம்(யுயுசிஏ) ஒரு சூடான விவகாரமாக இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதால் இப்போதைக்குக் கலந்துரையாடல் வேண்டாம் என அது முடிவு செய்துள்ளது.
சைபுடின் திறந்த மனம்கொண்ட, மனத்தில்பட்டதை வெளிப்படையாக பேசும் அம்னோ தலைவராக விளங்குகிறார். அவர் நேற்றிரவு யுஐஏ மாணவர்களுடன் ‘Kalau Saya Mahasiswa’ (நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தால்) என்னும் அவரது நூல் பற்றிக் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2009-இல் வெளியிடப்பட்ட அந்நூல் அந்த தெமர்லோ எம்பி-யின் ஐந்தாவது நூலாகும்.
சட்டத்துறை மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கலந்துரையாடலில் யுயுசிஏ மாணவர் உரிமைகளை அடக்க முயல்கிறதா, பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் அரசியல் ஈடுபாட்டை எப்படிக் கண்காணிக்கலாம் என்பது பற்றியும் விவாதிக்கப்பட விருந்தது.
ஆனால், நேற்றிரவு சைபுடினின் ஊடக அதிகாரி அனுப்பிவைத்த மின்னஞ்சல், அந்நிகழ்வு வேறொரு நாளுக்குத் தள்ளிப்போடப்பட்டிருப்பதாகக் கூறியது.
“யுஐஏ இயக்குனர் (பேராசிரியர் சலேஹா கமருடின்) அதை ரத்துச் செய்யுமாறு பணித்தார் என்று துணை இயக்குனர் (மாணவர் விவகாரம்) தகவல் அனுப்பியிருப்பதாக சைபுடின் கூறினார்” என அது தெரிவித்தது.
“யுயுசிஏ விவகாரம் இன்னும் பரப்பாக விவாதிக்கப்பட்டு வருவதுதான் இதற்குக் காரணமாகும்.”
கடந்த மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம், மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் யுயுசிஏ-இன் பிரிவு 15(5) அரசமைப்புக்கு முரணானது என்றும் அது பேச்சுரிமையை மீறுகிறது என்றும் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என்று அரசாங்கத்துக்கு நிறைய நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.
சைபுடின், அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், மசீச உதவித் தலைவர் கான் பிங் சியு போன்ற பிஎன் தலைவர்கள் அரசாங்கம் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் சட்டத்தைத் திருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.