நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் 2006-இல் உருவானபோது விவசாய அமைச்சராக இருந்தவர் இப்போதைய துணைப் பிரதமர் முகைதின் யாசின் என்பதால் அவ்விவகாரம் பற்றி அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்.
நடப்பு விவசாய அமைச்சர் நோ ஒமாரைவிட முகைதினுக்குத்தான் அந்தக் கால்நடை உற்பத்தித் திட்டம் மீதான சர்ச்சைக்குப் பதில் சொல்லும் பொறுப்பு அதிகம் என்றாரவர். எனவே, நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு (பிஏசி) புதன்கிழமை அவ்விவகாரத்தை விசாரிக்கும்போது அவர் முன்வந்து விளக்கமளிப்பதே முறையாகும்.
“என்எப்சி குளறுபடிக்கு முழுப் பொறுப்பையும் முகைதினே ஏற்க வேண்டும்”, என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஈப்போ தீமோர் எம்பியான லிம் குறிப்பிட்டிருந்தார்.
அவ்விவகாரத்தில் முகைதின் தம் பங்கையும் அமைச்சரவையின் பங்கையும் விளக்க வேண்டும் என்று லிம் விரும்புகிறார்.
இச்சர்ச்சையில், அவரது அம்னோ கட்சியினரும் பிஎன்னும் வரிந்துகட்டிக்கொண்டு என்எப்சிக்குப் பரிந்து பேசும்போது முகைதின் வாய்த் திறக்காமல் இருப்பதை லிம் கண்டித்தார்.
பிஏசி தலைவர் விலக வேண்டும்
பிஏசி தலைவர் அஸ்மி காலிட், அத்திட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டபோது அமைச்சராக இருந்தவர் என்பதால் குழுவின் விசாரணையில் அவர் கலந்துகொள்ளக்கூடாது என்றும் லிம் கேட்டுக்கொண்டார்.
2010-க்கான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை என்எப்சி-யில் பல குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதையும் அந்த அமைப்பு அதன் 2010 இலக்குகளில் 41.1 விழுக்காட்டை அடையவில்லை என்பதையும் கண்டுபிடித்து அறிவித்ததைத் தொடர்ந்து இச்சர்ச்சை மூண்டது.
அதன்பின்னர், என்எப்சி பணத்தில் ஆடம்பர கொண்டோமினியம் வாங்கப்பட்டதையும் அந்த நிறுவனத் தலைவருடைய குடும்பத்தினரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் செலவிடப்பட்டதையும் பிகேஆர் அம்பலப்படுத்தியது.
என்எப்சி, அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது. தன் இலக்குகள் அடையப்பட்டிருப்பதாகவும் ஆடம்பர கொண்டோமினியம்கள் ஒரு முதலீடு என்றும் பயன்படுத்தப்படாமல் கிடந்த பணத்தில்தான் அவை வாங்கப்பட்டன என்றும் கூறியது.
அதன் தலைவர், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலின் கணவரான முகம்மட் சாலே இஸ்மாயில், முன்னாள் ஊழியர்கள் இருவர்தான் என்எப்சிக்கு எதிராக சதி செய்திருக்கிறார்கள் என்றும் மாற்றரசுக் கட்சியிடம் என்எப்சி பற்றிப் போட்டுக்கொடுத்தவர்கள் அவர்களே என்றும் அவர் கூறினார்.
நேற்று பிகேஆர், அந்நிறுவனம் முகம்மட் சாலேயும் அவரின் மகனும் உம்ரா செய்வதற்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர்கள் சம்பந்தப்பட்ட வேறு இரண்டு நிறுவனங்களுக்குப் பண உதவி செய்ததாகவும் கூறியது.
போலீசார், கொண்டோமினியம் வாங்கியதில் நம்பிக்கை மோசடி குற்றம் நிகழ்ந்துள்ளதா என்பதை விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
முகைதின், கடந்த வெள்ளிக்கிழமை மாற்றரசுக் கட்சியின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்ததுடன் அரசு “உண்மை நிலவரத்தை நன்கு அறிந்துவைத்துள்ளது” என்றும் கூறினார்.