கூட்டரசு அரசியலமைப்பின் 3(1)வது பிரிவின் அடிப்படையில் ஒரினச் சேர்க்கை ‘அரசியலமைப்புக்கு முரணானது’ என இரண்டு அம்னோ அமைச்சர்கள் அளித்துள்ள விளக்கம் குறித்து சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தாம் ஒரினச் சேர்க்கையை ஆதரிக்கவில்லை எனக் கூறிய அப்துல் அஜிஸ், அந்த விதிமுறைக்கு பல வழிகளில் விளக்கம் அளிக்கலாம் என்றார். இஸ்லாம் தேசிய சித்தாந்தமா அல்லது தேசிய சமயமா என்பது அவற்றுள் ஒன்றாகும்.
“ஆனால் அனைவர் மீதும் இஸ்லாமியச் சட்டங்களையும் பண்புகளையும் அமலாக்க முடியும் அல்லது அமலாக்க வேண்டும் என்பது அதன் பொருள் அல்ல. முஸ்லிம் அல்லாதவர்கள் தங்கள் சமயத்தை பின்பற்றுவதற்கு சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர். அந்த விஷயம் அரசியலமைப்பின் 3(1)வது பிரிவு இஸ்லாத்தின் நிலையை பிரகடனம் செய்த பின்னர் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
“உண்மையில் அந்த இரு அமைச்சர்களும் விடுத்துள்ள அறிக்கை அந்த நிபந்தனையை மீறுகிறது. குற்றவியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பற்றி பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹாரோம் குறிப்பிட்டுள்ளார். அது சாதாரண சட்டம். அது அரசியலமைப்பு அல்ல. அதன் தொடர்பில் வழக்குப் போட முடியும். அதற்காக அது அரசியலமைப்புக்கு முரணானது எனப் பொருள்படாது.”
‘ஒரினச் சேர்க்கை அரசியலமைப்புக்கு முரணானது என்னும் கருத்து மீது ஜமில் கிர்-ரும் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸும் நேற்று இணக்கம் தெரிவித்திருந்தனர்.
அரசியலமைப்பு என்பது குற்றவியல் சட்டம் அல்ல மாறாக அடிப்படைச் சட்டமாகும். அது அரசாங்கத்தின் அதிகாரங்களையும் சாதாரண மக்களுடைய உரிமைகளையும் வரையறுக்கிறது.
“அரசியலமைப்புக்கு இணங்க இல்லை எனக் கருதப்படும் எந்தச் சட்டத்துக்கு எதிராகவும் சவால் விடுக்கப்படலாம்,” என்றார் அப்துல் அஜிஸ்.
“இரண்டு அமைச்சர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்திருப்பதால் அமைச்சரவை அந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.
“அமைச்சர்கள் கூட்டு பொறுப்புக் கோட்பாட்டுக்கு உட்பட்டிருப்பதால் அவர்கள் சொல்லியிருப்பது அரசாங்கத்தின் அதிகாரத்துவ நிலையைப் பிரதிநிதிப்பதாக கருதப்படலாம். என்றாலும் அந்த விவகாரம் மீது அமைச்சரவை அறிக்கை வெளியிடுவது நல்லது.’
“நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள்’
அத்தகைய அறிக்கைகள் மீது திருநங்கை சமூகமும் அதன் ஆதரவாளர்களும் கவலை அடைந்தால் அவர்கள் நீதித் துறை மறு ஆய்வுக்கும் பிரகடனத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.
“வாழ்க்கை உரிமை மீதான 5வது பிரிவு போன்ற அரசியலமைப்பு விதிகளை அவர்கள் அதற்குப் பயன்படுத்தலாம். வாழ்க்கை என்பது வெறும் வாழ்வு மட்டுமல்ல. வாழ்க்கைத் தரமும் அதில் அடங்கியுள்ளது என இங்குள்ள நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன,” என அவர் விளக்கினார்.
“அந்த இரு அமைச்சர்களும் அரசியலமைப்பு முறையை புரிந்து கொள்ளத் தவறி விட்டனர். அதனால் அவர்கள் அரசியலமைப்பு விதிகளை சரியான முறையில் பயன்படுத்தத் தவறியுள்ளனர்.”
“3(1) பிரிவு என்பது முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் கூட இஸ்லாமியப் பண்புகளையும் முறைகளையும் அமல்படுத்தலாம் எனப் பொருள்படும் என அந்த இருவரும் எண்ணுவதாக தோன்றுகிறது. உண்மையில் அது அப்படி அல்ல.”
“அத்தகைய தவறான கருத்து, அரசியலமைப்புக்கு முரணானது மட்டுமல்ல. சமய சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிப்பதுடன் சமய விவகாரத்தில் கட்டாயப்படுத்துவதையும் வெறுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரானதாகும்.
மலேசியாவில் ஒரினச் சேர்க்கை சம்பந்தப்பட்ட செயல்கள் (இயற்கைக்கு மாறான உடலுறவு) குற்றவியல் சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் தண்டனைக்குரியவை.