சுஹாகாம் பற்றிப் பலருக்குத் தெரியவில்லை, நீதிபதிகளுக்குக்கூட

மனித  உரிமை   ஆணையம்,  சுஹாகாம்   அமைக்கப்பட்டு   கிட்டத்தட்ட   இரண்டு  பத்தாண்டுகள்  ஆகிவிட்டன. பொதுமக்கள்  பலருக்கு   அப்படி  ஓர்  அமைப்பு  இருப்பது  தெரியவில்லை.  சில    நீதிபதிகளுக்குக்கூட    அது   இருப்பது  தெரியவில்லை.

வியாழக்கிழமை,   சுஹாகாம்  ஆணையர்  நிக்  சலிடா   சுஹய்லா   நிக்   சாலே   கோலாலும்பூர்,  கம்போங்   கிரிஞ்சியில்,  சுஹாகாமை  மக்களிடம்  பிரபலப்படுத்தும்     ஒரு   நிகழ்வில்   கலந்துகொண்டபோது  இதைத்   தெரிவித்தார்.

“அது  உண்மை.  கிள்ளான்  உயர்   நீதிமன்றத்தில்   ஒரு  நிகழ்வில்   கலந்துகொண்டபோது    நீதிபதிகள்   சிலர்   சுஹாகாம்   ஒரு  என்ஜிஓ-வா  என்று  வினவினார்கள்.

“நீதிபதிகள். என்னைப்  பார்த்துக்   கேட்கிறார்கள்(அப்படி)”,  என்று      எரிச்சலாகக்  குறிப்பிட்டார்   நிக்  சயிடா.

சுஹாகாம்  1999ஆன்  நாடாளுமன்றத்தால்  உருவாக்கப்பட்ட   ஓர்  அமைப்பு.  அது  பிரதமர்துறையின்கீழ்  உள்ளது.

மனித  உரிமைகள்மீது   அரசாங்கத்துக்கு    ஆலோசனை   கூறுவது     அதன்  முக்கிய   பணி.  ஆனால்,  அதன்   ஆண்டறிக்கைகள்   ஒருமுறைகூட    நாடாளுமன்றத்தில்    விவாதிக்கப்பட்டதில்லை,    அதன்   பரிந்துரைகளையும்   அரசு   வட்டாரங்கள்   மதிப்பதில்லை.

சுஹாகாம்  இப்போது   “Suhakam Bersama Masyarakat (மக்களுடன்  சுஹாகாம்)  என்ற  நிகழ்ச்சியின்  மூலம்   தன்னை   மக்களிடம்   பிரபலப்படுத்திக்கொள்ளும்  முயற்சியில்    இறங்கியுள்ளது.