மலேசியர்கள் 21 வயதை அடைந்ததும் இயல்பாகவே வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதற்கு வகை செய்யும் பொருட்டு அரசியலமைப்பைத் திருத்த அரசாங்கம் எண்ணவில்லை.
இவ்வாறு பிரதமர் துறை துணை அமைச்சர் விகே லியூ இன்று மக்களவையில் தெரிவித்தார். அந்த முறையில் பலவீனங்கள் இருப்பதாகவும் அது அமலாக்கப்பட்டால் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.
மக்கள் இடம் பெயருவது அதிக அளவில் நடைபெறுவதால் பெரும்பாலான மலேசியர்கள், தங்களது அடையாளக் கார்டுகளை முதலில் எடுத்த போது கொடுத்த முகவரிகளில் வாழ்வதில்லை என லியூ சொன்னார். அத்துடன் அவர்கள் தங்களுடைய முகவரி மாற்றங்களை பதிவு செய்வதுமில்லை.
“இயல்பான வாக்காளர் பதிவு அமலாக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடைபெற்றால் வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்துவதற்கு தாங்கள் வாக்காளர்களாகப் பதிந்து கொண்ட முகவரிகளுக்கு திரும்ப முடியாமல் போகலாம். அப்போது வாக்களித்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். அந்த நிலை மறைமுகமாக ஜனநாயக நடைமுறைக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.”
“அதன் அடிப்படையில் அரசாங்கம் வாக்காளர்களை இயல்பாக பதிவு செய்யும் முறையை இப்போதைக்கு அமலாக்க எண்ணவில்லை”, என லியூ, அந்த விவகாரம் மீது அரசாங்கத்தின் நிலை பற்றி அறிய விரும்பிய பிஎன் புடாட்டான் உறுப்பினர் டாக்டர் மார்க்குஸ் மொஜிகோ எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தார்.
2007ல் 842,726 பேரும் 2008ல் 155,420 பேரும் 2009ல் 279,270 பேரும் 2010ல் 819,489 பேரும் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
பெர்னாமா