பண்டார் துன் ரசாக் அம்னோ தொகுதித் தலைவர் ரிசல்மான் மொக்தார் திங்கள்கிழமை காலை ஒரு கேளிக்கை மையத்தில் போலீசார்
தன்னைக் கைது செய்தது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.
அச்சம்பவம் முழுவதுமே தன்னைச் சிக்கவைப்பதற்காக நடத்தப்பட்ட சதி என்று கூறிய அவர், தான் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎன் வேட்பாளராகக் களமிறக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த வாய்ப்பைக் கெடுப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் அது என்றார்.
“நான்தான் (செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும்) அந்நபர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
“சிறுநீர் பரிசோதனை அறிக்கை போதைப் பொருள் உட்கொண்டதாகக் காண்பிக்குமானால் அது என் பேரைக் கெடுப்பதற்கான சதி”, என்றவர் சொன்னார்.
அதிரடி சோதனை தன்னையும் தன் குழுவினரையும் குறிவைத்தே நடத்தப்பட்டதாக தெரிகிறது என்றார்.
“நடவடிக்கை எப்படி நடத்தப்பட்டது தெரியுமா? நேராக நாங்கள் இருந்த அறைக்குத்தான் வந்தார்கள். அங்கிருந்து நான் நேராக டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகம் கொண்டு செல்லப்பட்டேன்.
”வேறு எந்த அறைக்கும் அவர்கள் செல்லவில்லை”, என ரிசல்மான் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.