பெர்சே 2.0 பேரணி குறித்து பொது விசாரணை நடத்தி வரும் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் இன்று தனது விசாரணையை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றது.
அது ஏற்கனவே சாட்சிகளை விசாரிப்பதற்கு மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளது.
இன்று பிற்பகல், மோட்டார் சைக்கிள் ஒன்ரில் பின்னிருக்கைப் பயணியாக பயணம் செய்த முகமட் எப்படி விழுந்தார் என்பதை செய்து காட்டுவதற்கு ஏசிபி ஜமாலுதின் அப்துல் ரஹ்மான் தலைமையில் இயங்கிய போலீசார் முயற்சி செய்தனர்.
ஜாலான் டிராவர்ஸுக்கு அப்பால் உள்ள பெசியாரான் பெர்செக்குதுவான் நெடுகிலும் உள்ள மேடைப் பகுதியில் இன்னும் காணப்படும் டயர் குறிகளை சுட்டிக் காட்டிய ஜமாலுதின், அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மேடையை மோதியதாகச் சொன்னார். அதனால் முகமட்டும் அந்த மோட்டார் சைக்கிளோட்டியும் விழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அப்போது தங்களை மோதியதாக முகமட் கூறிக் கொள்ளும் போலீஸ் புரோட்டோன் வாஜா காரின் ஓட்டுநர் முகமட் பாவ்சி முஸ்தாபாவும் அந்த விவகாரத்தை புலனாய்வு செய்யும் அதிகாரியான சே அஜிஸ் முகமட் ஈசாவும் அங்கிருந்தனர். அவர்கள் இருவரும் இன்று சாட்சியமளித்தனர்.