அஜிஸ் பேரி-க்கு சிலாங்கூர் இஸ்லாமிய மன்றம் தடை விதிக்கிறது

சிலாங்கூர் சுல்தானைக் குறை கூறியதாகக் கண்டிக்கப்பட்ட சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி, சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகக் கல்லூரியில் (குய்ஸ்) நிகழும் கருத்தரங்கு ஒன்றில் பேசுவதற்கு சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம்(மாய்ஸ்) தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காஜாங்கில் அமைந்துள்ள குய்ஸ்,  மாய்ஸுக்கு முழுமையாகச் சொந்தமானதாகும். அது சிலாங்கூர் சுல்தான் கண்காணிப்பில் இயங்குகிறது.

அந்தக் கருத்தரங்கில் அஜிஸ் நாளை கட்டுரை ஒன்றை சமர்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“சிலாங்கூர் அரண்மனைக்கு அணுக்கமாக இருப்பதாகக் கூறிக் கொண்ட ஒருவர் என்னுடைய கட்டுரையை கைவிடுமாறு ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளதாக எனக்கு இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது”, என அஜிஸ் சொன்னார்.

“நான் பேசுவதை செவிமடுக்கும் பொருட்டு கருத்தரங்கிற்கு நிறையப் பேர் வருவதால் என்னை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அவரிடம் மன்றாடியுள்ளனர். ஆனால் ஏற்பாட்டாளர்கள் ஆணையைப் பின்பற்ற வேண்டும் என அவர்களிடம் தெளிவாக கூறப்பட்டதாக நான் அறிகிறேன்,” அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக விரிவுரையாளரான அவர் மலேசியாகினியிடம் சொன்னார்.

அந்தக் கருத்தரங்கிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என அஜிஸ் தெரிவித்தார். அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணரான அவர், அரசர்களின் பங்கு குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி டமன்சாரா உத்தாமாவில் நிகழ்ந்த நன்றி தெரிவிக்கும் பல இனவிருந்து ஒன்றில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை மேற்கொண்ட ‘சோதனை’ மீது சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட ஆணை குறித்து அஜிஸ் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் போலீசார் அவரை 1948ம் ஆண்டுக்கான தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் விசாரித்த போது அஜிஸ் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அஜிஸை ஆறு நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. நாடு முழுவதையும் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களும் கல்வியாளர்களும் உட்பட பல்வேறு அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்த பின்னர் அந்த இடைநீக்கம் மீட்டுக் கொள்ளப்பட்டது.