கோத்தா டமன்சாராவில் இருப்பவர், அவர் பதிவு செய்யாமலேயே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார்.
அயிடா நஸ்லின் என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், நான்காண்டுகளாக வெளிநாட்டில் தங்கி கல்வி பயின்று கொண்டிருக்கிறார்.
நாடு திரும்பிய பின்னர் வாக்காளராக பதிந்து கொள்வோம் என்ற நினைப்பில் இருந்த அவர் தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போனார்.
வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்த அவரின் பெற்றோர் அவர் பெயர் அதில் உள்ளதைக் கண்டு நேற்றுக் காலை அவரிடம் தெரியப்படுத்தினார்.
மகள் வாக்களிக்க நாடு திரும்பி வரப்போகிறாரா என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினார்கள்.
“ஒரு கணம் அதிர்ந்து போனேன். அரசாங்கம் தானாகவே வாக்காளராகும் பதிவுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதோ, வாக்களிக்காவிட்டால் தண்டிக்கப்படுவோமோ என்றெல்லாம் நினைத்தேன்.
“ நான் என்னை வாக்காளராக பதிந்து கொண்டதில்லை, அதனால் நினைவிழந்ததுபோலவும் தூக்கத்தில் நடப்பதுபோலவும் இருந்தது”, என்று மலேசியாகினியிடம் தெரிவித்த அயிடா , ஒருவர் வாக்காளராக பதிந்துகொள்வது எப்படி என்பதுகூட தனக்குத் தெரியாது என்றார்.
இசி வலைத்தளத்தைப் பார்த்ததில் அவர் கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதி மற்றும் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2014-இல் தன்னுடைய அடையாள அட்டையில் திரெங்கானு, டுங்குன் என்றிருந்த பூர்விக முகவரியை இப்போதைய முகவரிக்கு மாற்றியதாகவும் அதன் பின்னரே வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றவர் நினைக்கிறார்.
பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயாரிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டிருப்பதால் அந்த 32-வயது பெண்ணால் வாக்களிக்க நாடு திரும்பிவர முடியாது.
தன் பெயரில் வேறு யாராவது வாக்களித்து விடுவார்களோ என்றவர் கவலை கொண்டிருக்கிறார்.
வாக்காளர் பட்டியலில் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது அவரைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று, கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு இதேபோன்ற பிரச்னையை எதிர்நோக்கும் 10 வாக்காளர்களைச் செய்தியாளர் கூட்டமொன்றில் அறிமுகப்படுத்தினார்.
கிள்ளானில் வசிக்கும் இயுஜின் ஒலிவர்,25, வாக்காளராக பதிவு செய்துகொண்டதில்லை. ஆனாலும் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் உள்ளது என்றார்.
செய்தியாளர் கூட்டத்துக்கு வந்திருந்த மேலும் சில வாக்காளர்கள் தங்கள் வாக்களிப்பு தொகுதி கிள்ளானிலிருந்து தைப்பிங்குக்கு மாற்றப்பட்டிருப்பதாக முறையிட்டனர். இவ்வளவுக்கும் அவர்களின் முகவரியில் எந்த மாற்றமும் இல்லை.
அவர்களில் ஒருவரான சற்குணன் தமிழ்ச்செல்வன், 27, தேசியப் பதிவுத்துறை தரவுத்தளத்தில் தம்முடைய முகவரி திருத்தப்பட்டிருப்பதாகவும் அது தன்னுடைய மைகார்டில் உள்ளதுபோல் இல்லை என்றும் சொன்னார்.
இசி நாளைக்குள் எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும். இலலையேல் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் வழக்கு தொடுப்பார்கள் என சந்தியாகு கூறினார்.
இதனிடையே, மலேசியாகினி தேர்தல் ஆணையத் தலைவர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லாவைத் தொடர்பு கொண்டுள்ளது. அவரது பதிலுக்காகக் காத்திருக்கிறது.