1973-1974 எண்ணெய் நெருக்கடிக்குத் தீர்வாக பெட்ரோனாஸ் நிறுவனத்தை நிறுவிய முடிவு, அதற்குப் பிறகு ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளை மலேசியா எதிர்கொள்வதற்கானத் திறனை வலுப்படுத்த உதவியுள்ளதாக நிதித்துறை துணை அமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகள் எவ்வாறு நீண்டகால மூலோபாய சீர்திருத்தங்களுக்குத் தூண்டுகோலாக அமையும் என்பதற்கு தேசிய எண்ணெய் நிறுவனத்தின் உருவாக்கம் ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறினார்.
அந்த நேரத்தில் மலேசியத் தலைவர்கள் எடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்று பெட்ரோனாஸை நிறுவியதாகும் என்று லியூ குறிப்பிட்டார்.
ஏனெனில், ஒரு தேசிய பெட்ரோலிய நிறுவனம் இல்லாமல், நமது நாட்டில் இயங்கும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருந்தால், அடுத்த நெருக்கடி ஏற்படும் போதும் நாம் இதே போன்ற பாதிப்பைச் சந்திப்போம் என்று அவர்கள் உணர்ந்ததே இதற்கு காரணம்,” என்று இங்கு நடைபெற்ற அஃபின் சந்தை அவுட்லுக் மாநாடு 2026-இல் அவர் கூறினார்.
அரபு-இஸ்ரேல் போரின் போது அரபு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OAPEC) விதித்த தடையால் தூண்டப்பட்ட 1973-1974 நெருக்கடி, எண்ணெய் விலையை நான்கு மடங்கு உயர்த்தியதுடன் உலகப் பொருளாதாரத்தை மந்தநிலைக்குத் தள்ளியது.
பெட்ரோனாஸ் மற்றும் அதன் கீழ்நிலைச் செயல்பாடுகள் மூலம் மலேசியா தற்போது பலன் அடைந்து வருவதாக லியூ கூறினார். அமெரிக்க-ஈரான் மோதலால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், மலேசியா ஒரு “சிறந்த மறுகட்டமைப்பு” அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்றும், நெருக்கடிக்கு பிந்தைய சாதகமான முடிவுகளை இப்போதே தீர்மானித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம், நாடு முழுவதும் உள்ள தனது நிலையங்களில் எரிபொருள் விநியோகம் ஜூன் இறுதி வரை நீடிக்கும் என்று பெட்ரோனாஸ் தெரிவித்தது. அதே வேளையில், விநியோகத் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான கூடுதல் நடவடிக்கைகளை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மே பாதியில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், அதன் பொதுப் பட்டியலிடப்பட்ட துணை நிறுவனமான பெட்ரோனாஸ் டகாங்கன் பெர்ஹாட் மூலம் நாட்டின் எரிபொருள் தேவையில் 50% வழங்குகிறது; மீதமுள்ளவை மலேசியாவில் இயங்கும் பிற எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
மேலும், லாபுவானில் உள்ள பெட்ரோனாஸின் மெத்தனால் வசதிகளைக் குறிப்பிட்ட லியூ, அங்குள்ள இரண்டு ஆலைகளும் இணைந்து உலகின் மிகப்பெரிய மெத்தனால் உற்பத்தி வளாகமாகத் திகழ்வதாகச் சுட்டிக்காட்டினார்.
-fmt
























