பொதுக் கணக்குக் குழு (PAC), பொதுச் சுகாதாரத் துறையின் மீது அதிகரித்து வரும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் (Health Insurance Premiums) மற்றும் தனியார் மருத்துவமனைக் கட்டணங்களின் தாக்கம் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளின் அதீத பயன்பாடு, சுகாதாரச் செலவுகள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் உயர்வதற்குக் காரணமாக அமைகிறது என்று சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்கள் பொதுக் கணக்குக் குழுவின் விசாரணையில் தெரிவித்தன.
தனியார் மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் மருத்துவக் உபகரணங்களின் அதிகப்படியான பயன்பாடு: PAC அறிக்கை
கடந்த ஆண்டு மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் உயர்வு குறித்த நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (PAC) விசாரணையின் போது, தனியார் மருத்துவமனைகளின் கட்டண முறைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து காப்பீட்டுத் துறை தலைவர்கள் தீவிரமாக ஆராய்ந்தனர்.
இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட PAC அறிக்கையின்படி, அலையன்ஸ் மலேசியா பெர்ஹாட் (Allianz Malaysia Bhd) தலைவர் சக்ரி கிர் (Zakri Khir) கடந்த ஆண்டு ஜூன் 19 அன்று நடைபெற்ற PAC விசாரணையின் போது, மருத்துவமனைகள் தங்களின் மூலதனச் செலவை மீட்டெடுப்பதற்காக விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டை தீவிரமாக ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
சிறுநீரகக் கற்களை உடைக்கப் பயன்படுத்தப்படும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (RM4.12 மில்லியன்) மதிப்புள்ள ‘லித்தோட்ரிப்டர்’ (lithotripter) இயந்திரத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட சக்ரி, மருத்துவமனைகள் தாங்கள் முதலீடு செய்த தொகையை விட குறைந்தது ஆறு மடங்கு வருவாயை எதிர்பார்ப்பதால், அதன் பயன்பாட்டை அதிகரிக்க அழுத்தம் கொடுப்பதாகக் கூறினார்.
“அந்தச் செலவை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி அதிக கட்டணம் வசூலிப்பதாகும். எனவே, இது நியாயமான விலை நிர்ணயம் அல்ல. அவர்கள் ஒரு புதிய இயந்திரத்தை வாங்கிவிட்டு, ‘ஓ, நாம் இதைப்பயன்படுத்த வேண்டும்’ என்று கூறுகிறார்கள். அவர்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி, ‘தயவுசெய்து இந்த இயந்திரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்துங்கள்’ என்று கூறுகிறார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது,” என்று PAC இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
“நான் தனியார் மருத்துவமனைகளைக் குறை கூறவில்லை. அவர்கள் மற்றுமொரு தனியார் நிறுவனத்தைப் போலவே செயல்படுகிறார்கள் – அவர்கள் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். ஆனால், இதில் ஒரு குறிப்பிட்ட சமநிலை எட்டப்பட வேண்டும். நாம் நியாயமான விலை நிர்ணயத்தை அடைய வேண்டும். எது நியாயமானது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (Socso) முன்னாள் தலைவரான சக்ரி, 2025 பிப்ரவரி 24 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்ற 19 PAC விசாரணைகளில் சாட்சியமளித்த 21 சாட்சிகளில் ஒருவராவார்.
உயர்ந்து வரும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள், தனியார் மருத்துவமனைக் கட்டணங்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையில் அவற்றின் தாக்கம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட PAC அறிக்கையில் இந்த விசாரணைப் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் மற்றும் மலேசியர்கள் தங்களின் காப்பீட்டுப் பாதுகாப்பைத் தொடர்ந்து பராமரிக்கும் திறன் குறித்துப் பரவலான பொது மக்கள் கவலை அடைந்ததைத் தொடர்ந்தே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக PAC தெரிவித்துள்ளது.
வலுவான கண்காணிப்பு இல்லையெனில், உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகள் காப்பீட்டு பிரீமியங்களைத் தொடர்ந்து உயர்த்தும் என்றும், இது குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த சுகாதார அமைப்பு ஆகிய இரண்டின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் PAC விசாரணைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மருத்துவ வீணடிப்பு மற்றும் கட்டண மாறுபாடுகள்
விலை நிர்ணய முறைகள் குறித்த கவலைகளை எதிரொலித்த ஏஐஏ பெர்ஹாட் (AIA Berhad) தலைமை நிர்வாக அதிகாரி ஹெங் சீ வாங் (Heng Zee Wang), மருத்துவமனைகள் வழங்கும் தள்ளுபடிகள் பெரும்பாலும் பயனற்றவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். ஏனெனில், பேச்சுவார்த்தை மூலம் குறைக்கப்படும் கட்டணங்கள், பிற கட்டணங்களின் உயர்வு மூலம் ஈடுசெய்யப்பட்டு விடுகின்றன.
முக்கியமான பிரச்சினை தள்ளுபடிகள் அல்ல, மாறாக தேவையற்ற எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன்கள் மற்றும் எண்டோஸ்கோபி (endoscopic) நடைமுறைகள் உள்ளிட்ட மருத்துவ வீணடிப்பு மற்றும் அளவுக்கு அதிகமான பயன்பாடு தான் என்று அவர் வாதிட்டார்.
ஒரே மாதிரியான மருத்துவ நடைமுறைகளுக்கு வெவ்வேறு மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களில் உள்ள பெரும் முரண்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பிய ஹெங், இதற்கான தெளிவான அளவுகோல்கள் தேவை என்று வலியுறுத்தினார்.
“ஒரு மருத்துவமனை MRI ஸ்கேனுக்கு ரிம 5,000 வசூலிக்கும் போது, மற்றொரு மருத்துவமனை ரிம 3,000 மற்றும் இன்னொன்று ரிம 1,500 ஏன் வசூலிக்கிறது? இது மருத்துவமனைகள் ஈட்டும் லாப வரம்புகளைப் பற்றியது அல்ல. நோயாளிகளுக்கும் காப்பீட்டுதாரர்களுக்கும் நியாயமான கட்டணங்கள் உறுதி செய்யப்படுவதைப் பற்றியது,” என்று அவர் கூறினார்.
மருத்துவ நடைமுறைகளின் அளவுக்கதிகமான அல்லது பொருத்தமற்ற பயன்பாடு இறுதியில் ஒட்டுமொத்த காப்பீட்டுக் குழுமத்தின் பிரீமியங்களையும் உயர்த்துகிறது என்று அவர் எச்சரித்தார். “ஒருவரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், காப்பீட்டுக் குழுவில் உள்ள மற்ற ஒன்பது பேர் அதற்குப் பணம் செலுத்த வேண்டியிருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஒழுங்குமுறை கட்டமைப்புக்கான தேவை
புருடென்ஷியல் அஷ்யூரன்ஸ் மலேசியா பெர்ஹாட்டினுடைய (Prudential Assurance Malaysia Berhad) முதன்மை சுகாதார அதிகாரி மனிஷா கேயல் (Manisha Keyal) கூறுகையில், காப்பீட்டுத் துறை வெறுமனே குறைந்த அல்லது அதிக விலையைக் கோரவில்லை, மாறாக மருத்துவமனைக் கட்டண உயர்வை முறைப்படுத்துவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பைக் கோருகிறது என்றார்.
மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் ஒழுங்குபடுத்தப்படும் அதே வேளையில், தனியார் மருத்துவமனைக் கட்டணங்கள் காலப்போக்கில் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதைக் கண்காணிக்க தற்போது அதுபோன்ற எந்தவொரு அமைப்பும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“முக்கியமான விஷயம் என்னவென்றால், நமக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட விலை நிர்ணயம் தேவை. காப்பீட்டு நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பு (பாங்க் நெகாரா மலேசியா) பிரீமியம் உயர்வை ஒழுங்குபடுத்துகிறது. அவர்கள் நிறுவனம் எதிர்கொள்ளும் செலவுகள், சேகரிக்கப்பட்ட பிரீமியங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அதற்கேற்ப தயாரிப்புகளின் விலையை நிர்ணயிக்க அனுமதிக்கின்றனர்”.
“தனியார் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளுக்கு இதேபோன்ற நிர்வாகக் கட்டமைப்பு தேவை – இந்த செலவுகள் எவ்வாறு அதிகரிக்கும், அதிகரிப்புக்கான அளவுகோல்கள் என்ன, அவற்றை எவ்வாறு பகுத்தறிவுடன் சீரமைக்கலாம் என்பது இதில் அடங்கும்,” என்று அவர் கூறினார்.
























