4 முறை அறைந்த முன்னாள் ஆசிரியர் ரிம 88,000 இழப்பீடு செலுத்த வேண்டும்

கோத்தா பாரு உயர் நீதிமன்ற நீதிபதி, இசாமுடின் இஸ்மாயில் மாணவர் ஆடாம் மைதீனை பின்னாலிருந்து இரண்டு கைகளாலும் அவரது முகத்திலும் கன்னங்களிலும் அறைந்து உடல்ரீதியாகத் தாக்கினார் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

கோத்தா பாரு உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லி யூசோஃப், முன்னாள் ஆசிரியர் தனது மாணவர்களிடம் கவனப் பொறுப்பு செலுத்தும் கடமையைக் கொண்டிருந்தார் என்று கூறினார்.

2019-ஆம் ஆண்டில் தனது முன்னாள் மாணவரை நான்கு முறை அறைந்ததற்காக, ஓய்வு பெற்ற இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் அம்மாணவருக்கு ரிம 88,069 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோத்தா பாரு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 வயதான ஆடாம் மைதின், தனது தாயாரான நூர் அஸ்லீன் முகமது (47) மூலமாகத் தொடர்ந்த உரிமையியல் வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரோஸ்லி யூசோஃப் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக சினார் ஹாரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வழக்கில் வரலாற்று ஆசிரியரும், அப்பள்ளியின் மூத்த நிர்வாக உதவித் தலைமை ஆசிரியருமான இசாமுதீன் இஸ்மாயில் (63) முதல் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

ஆடாம் வகுப்பறையில் இருந்தபோது, அவருக்குப் பின்னாலிருந்து வந்த இசாமுதீன், அவருடைய முகம் மற்றும் கன்னங்களில் இரு கரங்களாலும் அறைந்து தாக்கியதை நீதிபதி உறுதி செய்தார்.

ஆடாம் காயமடைந்ததைக் காட்டும் மருத்துவ ஆதாரங்கள் மற்றும் பல செவிப்புலன் பரிசோதனைகளை நீதிமன்றம் கருத்தில் கொண்டதாகக் கூறிய நீதிபதி, ஒரு கல்வியாளராக இசாமுதீனுக்குத் தனது மாணவர்கள் மீது அக்கறை செலுத்தும் கடமை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

பள்ளியின் தலைமையாசிரியர், கல்விப் பணிப்பாளர் மற்றும் அரசாங்கம் ஆகியோரும் இதில் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் சார்பில் மூத்த பெடரல் வழக்கறிஞர் சித்தி ஷாகிமா இப்ராஹிம் ஆஜரானார்.

சம்பவத்தன்று காலை 10.30 மணியளவில், ஆடாம் தனது சக மாணவர்களுடன் மேஜையில் அமர்ந்திருந்தபோது, பின்னாலிருந்து வந்த இசாமுதீன் அவரை நான்கு முறை அறைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆடாமிற்கு முகம் மற்றும் காதுகளில் வலி, தலைச்சுற்றல், செவிப்புலன் குறைபாடு மற்றும் காதில் இரைச்சல் உணர்வு போன்றவை ஏற்பட்டன.

அவரது தாயார் அவரை பெரெக் 12 சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்; பின்னர் காது நிபுணரின் பரிசோதனைக்காக குபாங் கெரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக (USM) மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஜூன் 2019-இல் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி, ஆடாமின் வலது காதில் லேசான முதல் மிதமான அளவிலான செவிப்புலன் இழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், இது அறைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சிக் காயம் என்றும் கண்டறியப்பட்டது.

ஆசிரியரை மீண்டும் சந்திக்கப் பயந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் வேறு பள்ளிக்கு மாறினார்; மேலும் இந்த மன அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர அவருக்குச் சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பிடித்ததாகக் கூறப்படுகிறது.