72 வயது முதியவர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலமாக ஒரு கும்பலால் ஆசை காட்டி ஈர்க்கப்பட்டு, பினாங்கு வந்தடைந்த பிறகு கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதே கும்பல் கோலாலம்பூரில் நடந்த மேலும் இரண்டு கடத்தல் சம்பவங்களிலும் தொடர்பிலிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் எம். குமார் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பினாங்கிற்கு வந்த 72 வயதான சிங்கப்பூர் ஓய்வூதியதாரர் ஒருவருக்கு, ஆலோசகர் பணி (consultant job) தருவதாகக் கூறி விடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான வேலை வாய்ப்பு ஒரு சதியாக மாறியது. அவரைத் கடத்திய கும்பல், ரிம 3.2 மில்லியன் பிணைத் தொகையாகக் கேட்டது.
கடந்த வாரம், பிணைத் தொகையில் ஒரு பகுதி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர் மீட்கப்பட்டதாகவும், வெளிநாட்டினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் எம். குமார் இச்சும்பவம் குறித்த கூடுதல் விவரங்களை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட நபர் ஜூலை 26 அன்று பினாங்கு வந்தடைந்த பிறகு, சிங்கப்பூரில் உள்ள அவரது குடும்பத்தினர் அவருடனான தொடர்பை இழந்ததாகக் கூறினார்.
பின்னர் ஆகஸ்ட் 4 அன்று, அவர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கும் குரல் பதிவையும், பாதிக்கப்பட்டவர் கைகள் விலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் காணொளியையும் அவரது குடும்பத்தினர் பெற்றனர்.
காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை கெடாவில் உள்ள அலோர் சேட்டாரின் தெலகா பாத்தாவில் இருக்கும் தாமான் அமீரா எனும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து பாதிக்கப்பட்ட முதியவரையும், அங்கு சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெண்ணையும் மீட்டனர்.
இந்தச் சோதனையின் போது, வெளிநாட்டினர் என நம்பப்படும் இரு சந்தேக நபர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக குமார் கூறினார். அதே வேளையில், ஐந்து சீனா நாட்டவர்கள் மற்றும் ஒரு மலேசியர் உட்பட மேலும் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட முதியவரின் குடும்பத்தினர், சந்தேக நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகளில் மொத்தம் சுமார் ரிம 48,000 மதிப்பிலான தொகையை மூன்று தவணைகளாகச் செலுத்தியதாகக் குமார் தெரிவித்தார். அதேபோல, மீட்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடமும் ரிம 64,000 செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கும்பல் வீசாட் (WeChat) மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் அல்லது சமூக வழித்துணை சேவைகளை (social escort services) வழங்கி, பாதிக்கப்பட்டவர்களை ஈர்த்து, பின்னர் அவர்களை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
காவல்துறையினர் இரு துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் ஒரு கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
“கோலாலம்பூரில் நடந்த மேலும் இரு கடத்தல் சம்பவங்களிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது,” என்று குமார் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டுமே அறிமுகமான நபர்களின் வேலை வாய்ப்புகளை நம்பி பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
























