மலேசியா உட்பட மூன்று நாடுகள் சம்பந்தப்பட்ட உலகளாவிய லஞ்ச ஊழல் குறித்து புலனாய்வு நடத்தப்பட்ட பின்னர் நிறுவன கவனக் குறைவுக்காக அல்ஸ்டோம் என்ற பிரஞ்சு மின்சார பொறியியல் குழுமத்துக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர் (124 மில்லியன் ரிங்கிட்) அபராதத்தை ஸ்விஸ் அதிகாரிகள் விதித்துள்ளனர்.
லாட்வியா, மலேசியா, துனிசியா ஆகிய நாடுகளில் அந்த நிறுவன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மூன்று விவகாரங்களில் கவனக் குறைவுக்காக 2.5 மில்லியன் ஸ்விஸ் பிராங்( 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்) அபராதம் விதிக்கப்பட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
அந்த விவகாரங்கள் தொடர்பில் அது அடைந்த ஆதாயத்துக்கு இணையாக 36 மில்லியன் பிராங் (39.3 மில்லியன் டாலர்) செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த மூன்று விவகாரங்களில் இரண்டில் அல்ஸ்டோம் கையூட்டுக்கள் மூலம் நன்மை அடைந்ததாக கூறப்பட்ட அதன் ஊழியர்களில் சிலருடைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் பெயரில் அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டதாக அல்ஸ்டோம் கூறியது.
“மூன்றாவது விவகாரத்தில் பெரிய கூட்டு நிறுவனம் ஒன்றின் துணைக் குத்தகையாளராகவே அல்ஸ்டோம் இருந்துள்ளது,” எனக் கூறிய அந்த நிறுவனம் ஸ்விஸ் அதிகாரிகள் முடிவுக்கு சவால் விடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்தது.
வர்த்தகக் குத்தகைகளைப் பெறுவதற்காக அந்நிய அரசாங்க ஊழியர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடை செய்யும் விதிமுறைகளை அல்ஸ்டோமும் அதன் பிரிவுகளும் மீறினவா என்பது மீதான ஆய்வு 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.
எம்ஏசிசி விசாரிக்கும்
அல்ஸ்டோம் தவிர்த்து அல்காட்டல்-லுசண்ட் என்னும் தொலைத் தொடர்பு குழுமம் என்னும் இன்னொரு அந்நிய நிறுவனமும் மலேசிய அரசாங்க அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2006ம் ஆண்டு ஜுன் மாதத்திற்கும் இடையில் மலேசியா உட்பட ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக பாரிஸைத் தளமாகக் கொண்டுள்ள அல்காட்டல்-லுசண்ட் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
அமெரிக்க நீதித் துறை பங்குப்பத்திர பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றுடன் இணக்கம் கண்ட பின்னர் அந்த நிறுவனம் குற்றச்சாட்டுக்களை தீர்த்துக் கொள்வதற்கு அபராதமாக 137 மில்லியன் அமெரிக்க டாலரை ( 432.4 மில்லியன் ரிங்கிட் ) செலுத்துவதற்கு கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டது.
அந்த விவகாரத்தைத் தான் புலனாய்வு செய்யப் போவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது.