பாசிர் மாஸில் இராணுவத் தளம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார் இப்ராஹிம் அலி

பாசிர் மாஸில் இராணுவத் தளம் அமைக்கப்பட வேண்டும் என பாசிர் மாஸ் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அலி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவ்வாறு கட்டப்படும் போது அங்கு “பிஎன் ஆதரவு” வாக்காளர் எண்ணிக்கை கூடும் என அவர் சொன்னார்.

“ஒரு பட்டாளம் அளவு துருப்புக்கள். அது நிறைய வாக்காளர்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கலாம் ( Serampang dua mata ). தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் அதனை இப்போது கட்டுங்கள். தயாராக இருங்கள் ( sediakan payung sebelum hujan ).”

இப்ராஹிம் இன்று மக்களவையில் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தற்காப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீது குழு நிலையில் நிகழ்ந்த விவாதத்தில் பேசினார்.

கிளந்தான் பாசிர் மாஸுக்கு அருகில் உள்ள தேசா பஹாலாவானில் அமைந்துள்ள 8வது பட்டாள இராணுவத் தளம் சரியான இடத்தில் இல்லை என அவர் வாதாடினார்.

“பாசிர் மாஸ் ரந்தாவ் பாஞ்சாங்கைச் சந்திக்கு தாய்லாந்து எல்லைப் பகுதியில்தான் உண்மையான மருட்டல் நிலவுகிறது. அங்குதான் எல்லா கடத்தலும் நிகழ்கிறது. போதைப் பொருள் கடத்தலும் நடைபெறுகிறது,” என்றார் அவர்.

அந்தத் தளத்தை இடம் மாற்றுவதற்கு அல்லது தமது தொகுதியில் இன்னொரு தளத்தைக் கட்டுவதற்கு திட்டம் ஏதும் உள்ளதா என இப்ராஹிம் தற்காப்பு அமைச்சை வினவினார்.

தமது தொகுதியில் ஒரு பட்டாளம் துருப்புக்கள் முகாம் அமைப்பதற்கான தளம் இருந்தால் கூட போதும் அது பிஎன் -னுக்கு கணிசமான இராணுவ வாக்காளர்களைக் கொண்டு வரும் என அவர் கூட்டரசு அரசாங்கத்துக்கு மறைமுகமாக நினைவுபடுத்தினார்.

இராணுவத்தை அடித்தளமாகக் கொண்ட வாக்காளர்கள் மற்றும் அவர்களது துணைவியர்களுக்கான அஞ்சல் வாக்குகள் பிஎன் -னுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பக்காத்தான் ராக்யாட் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்ற தேர்வுக் குழுவிடம் எழுப்பபட்டுள்ள பல பிரச்னைகளில் அதுவும் ஒன்றாகும்.