2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை: பாராட்டுகுரியது, சார்ல்ஸ்

அண்மையில் நடைபெற்ற மைடஃப்தார் பதிவு வாயிலாக குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் 2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு மகிழ்ச்சி தரும் செய்தி. அரசாங்கத்தின் இம்முயற்சி வரவேற்கத்தக்கது என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

கடந்த பிப்ரவரி 19-26 வரை நடைப்பெற்ற பதிவுகளில் மொத்தம் 6,541 இந்தியர்கள் பதிந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல் அளித்திருந்தார். ஆனால் பதிந்தவர்களில்  38 விழுக்காட்டினருக்கு மட்டுமே குரியுரிமை வழங்கப்பட்டுள்ளது வேதனையான செய்தியாகும்.
மீதமுள்ள 4,041  விண்ணப்பங்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பிய சார்ல்ஸ், சரியான முகவரி இல்லாததால் செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

மேலும், மலேசியாவில் குடியுரிமை பிரச்னையில் சிக்கிக் கொண்டிருக்கும் 40,000  இந்தியர்களில் இப்போது 2,500 பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது குடியுரிமை பிரச்சனையில் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் இந்தியர்களில் 6.25 விழுக்காடுதான். 

நான்கு மணி நேரம் போதுமே!

நிரந்தர குடியுரிமை உடையவர் ஒருவருக்கு நான்கு மணி நேரத்தில் எந்தப் பிரச்சனையும் இன்றி குடியுரிமை வழங்கப்பட முடியுமானால், மலேசியாவில் பிறந்த இந்தியர்களுக்கு மட்டும் ஏன் ஒரே மாதத்திலோ அல்லது குறுகிய காலத்திலோ குடியுரிமை வழங்க முடியாது என வினவிய சார்ல்ஸ், இந்தியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் பாரபட்சம் காட்டி வருவது இங்கு தெளிவாகிறது என்றார்.

காலங்காலமாய் இந்தியர்களின் தீரா பிரச்சனையாக நீடித்து வரும் இந்தக் குடியுரிமை பிரச்னையைக் களைய, இந்தியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியென கூவிக்கொண்டிருக்கும் புதிய முழு அமைச்சரான ஜி.பழனிவேல் ஏதாவது யுக்திகளையோ திட்டங்களையோ வைத்துள்ளாரா அல்லது பிரதமரிடம் கூறியுள்ளாரா என சார்ல்ஸ் வினவினார்.

மேலும், சட்ட விரோத அந்நிய தொழிலாளர்களைப் பதிவு செய்வதில் அதீத ஆர்வம் காட்டி வரும் அரசாங்கம், இன்னும் தீர்க்கப்படாமல் மிஞ்சி இருக்கும் இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்க்க ஏதாவது செயல் திட்டம் கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பியதோடு, இதில் காட்டிய ஆக்ககரமான செயலை இந்தியர்களின் குடியுரிமை பிரச்னையைத் தீர்ப்பதிலும் காட்ட அரசாங்கம் முன் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த மை டப்தார் பதிவு மேலும் ஆக்ககரமாக செயல் பட மலேசியா முழுவதும் பதிவு முகவர்களை நியமித்து நீண்ட நாட்கள் வரை இப்பதிவு நடத்தப்பட வேண்டும். மிஞ்சி இருக்கும் இந்தியர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இந்த பதிவு நடைபெறுவதை அரசாங்கம் உறுதி செய்தாக வேண்டும். இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றோம் என முழக்கம் போட்டு மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி விட்டு இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்க்க தீவிரமாக முழுமூச்சுடன் செயல்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார் சார்ல்ஸ்.

TAGS: