தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது கிளந்தானுக்கு சம்மதமே

கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டும் ஒரே நேரத்தில் கலைக்கப்படுவதுதான் சரி என்கிறார்.

நாடாளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் தனித்தனியே கலைப்பதால் பல பிரச்னைகள் உண்டாகும் என்று நிக் அசீஸ் குறீப்பிட்டார்.

நேற்று கோத்தா பாருவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, கிளந்தானில் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் தனித்தனியே தேர்தல்கள் நடத்த வேண்டியதில்லை என்று அந்த பாஸ் ஆன்மிகத் தலைவர் குறிப்பிட்டார்.

“அது மாற்றரசுக் கட்சி (அம்னோ)க்குக் கூடுதல் அவகாசம் கொடுப்பதாக அமையும்”, என்றாரவர்.

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குமுன் நடத்தப்பட்டால் சிலாங்கூர் அரசு சட்டமன்றத்தைக் கலைக்காது என்று அறிவித்திருந்தார். அவ்வாறு செய்தால் 2012 சிலாங்கூர் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த போதுமான அவகாசம் இருக்காது என்று அவர் காரணம் கூறினார்.

-பெர்னாமா