பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மூன்று அவசர காலப் பிரகடனங்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட அந்த மூன்று பிரகடனங்களும் அமலில் இருக்கின்றன.
நீக்கப்படும் அவசர காலப் பிரகடனங்கள் வருமாறு:
1966ம் ஆண்டு சரவாக்கில் ‘அரசியல் வேறுபாட்டை ஒடுக்குவதற்கு’ இயற்றப்பட்ட மாநில அவசர காலப் பிரகடனம்;
1969ம் ஆண்டு மே 13 இனக் கலவரங்களுக்குப் பின்னர் பிரகடனம் செய்யப்பட்ட தேசிய அவசர காலம்;
1977ம் ஆண்டு கிளந்தானில் ‘அரசியல் வேறுபாட்டை ஒடுக்குவதற்கு’ பிரகடனம் செய்யப்பட்ட மாநில அவசர காலப் பிரகடனம்.
அந்தப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மலேசியர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற அவசர காலச் சட்டங்களின் நிழல்கள் மறைந்து விடும்.
அந்த பிரேரணை, கூட்டரசு அரசமைப்பின் 150வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் தன்மூப்பாக சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் அகற்றுகிறது.
என்றாலும் 150வது பிரிவின் கீழ் அரசாங்கம் ஏற்கனவே இயற்றியுள்ள அவசர காலச் சட்டமும் மற்ற விதிமுறைகளும் அந்த அவசரகாலங்கள் அகற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னரே செல்லாமல் போகும்.
அந்தப் பிரேரணை தாக்கல் செய்யப்படுவதைத் தொடர்ந்து 150வது பிரிவின் கீழ் இயற்றப்பட்ட சட்டங்கள் செல்லாமல் போவதால் அரசாங்கம் தேசியப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கான மருட்டல்களை சமாளிப்பதிலும் குற்றச்செயல்களை ஒடுக்குவதிலும் சிரமங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என நஜிப் எச்சரித்தார்.
அந்தப் பிரேரணை இன்று காலை கேள்வி நேரத்துக்குப் பின்னர் சமர்பிக்கப்படும் என நேற்றிரவு மக்களவைக் கூட்டத்தின் முடிவில் சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியா அறிவித்தார்.
அதற்கு முன்னதாக நேற்றிரவு 2012ம் ஆண்டுக்கான விநியோக மசோதாவை( 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்) மக்களவை ஏற்றுக் கொண்டது.