செட்டிக் நிதியில் RM30 மில்லியனை, பிஎன் ஜிஇ14-க்குப் பயன்படுத்தியது

இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டு சிறப்புப் பிரிவின் (செடிக்) நிதியில் RM30 மில்லியனை, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான அரசு மோசடி செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டுமென மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

பிகேஆர் மகளிர் பிரிவின் துணைத் தலைவர் சிவமலர் கணபதி, இந்த ஆண்டு செடிக்குக்கு ஒதுக்கப்பட்ட RM50 மில்லியனுக்கும் அதிகமான நிதி, இந்திய சமூகத்தினருக்கும் அவர்கள் சார்ந்த அரசு சாரா நிறுவனங்களுக்கும் வந்து சேரவில்லை, அவை பாரிசான் நேஷனல் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டது எனும் குற்றச்சாட்டுகள் மீது முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

“இவை கடுமையான குற்றச்சாட்டுகள், மலேசியர்கள் அதற்கான பதில்களைப் பெற தகுதியுடையவர்கள்.

“மலேசிய இந்தியர் புளூபிரிண்ட்டை (எம்.ஐ.பி.) ஹராப்பான் மறுபரிசீலனை செய்யும் என்று, கடந்த வாரம் அமைச்சர் எம். குலசேகரனின் கூறியுள்ளதை நான் வரவேற்கிறேன்.

“செடிக் அல்லது ‘சீட்’ போன்ற மற்ற அமைப்புகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அல்லது சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துகொள்வதற்கு முன்னதாக நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்,” என்றார் அவர்.

“செடிக் உருவாக்கப்பட்டதில் இருந்து, அதன் நிர்வாகம் மீது முழுமையான மதிப்பாய்வு செய்ய வேண்டும். அனைத்து நிதிகளும் முறையாக நிர்வகிக்கப்படுகின்றனவா? எந்தெந்த தொண்டு நிறுவனங்கள் நிதி பெற்றன? அவை முறையாக விநியோகிக்கப்பட்டனவா?

“ஒருவேளை பக்காதான் ஹராப்பான் செடிக்கைத் தடைசெய்துவிட்டால், சமூகத்துக்கும் இயக்கங்களுக்கும் ஆதரவளிக்க உறுதியான ஓர் இயக்கம் இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த மாதம், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மலேசியாவில் உள்ள சிறுபான்மையின சமூகங்கள், இந்திய சமூகம், ஒராங் அஸ்லி, பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்கவிருப்பதாக அறிவித்தார்.