ஹரப்பான் வழியில் போராடுவீர்: அம்னோவுக்கு பங் அறிவுறுத்து

அம்னோ    உச்சமன்ற   உறுப்பினர்     பங்    மொக்தார்   ரடின்,   மே  9 பொதுத்   தேர்தல்   தோல்வியால்  துவண்டு  போன  தம்   தீவகற்ப   சகாக்களுக்கு   பயனான   எதிர்க்கட்சியாக   விளங்குவது    எப்படி   என்று   ஆலோசனை    கூறியுள்ளார்.

மலேசியாகினியிடம்    உரையாடிய    பங்,   பக்கத்தான்   ஹரப்பான்  எதிரணியில்    இருந்தபோது    எப்படிச்   செயல்பட்டதோ   அதே  முறையில்   அம்னோவும்    செயல்பட   வேண்டும்   என்றார்.

அதாவது  “அடி  கொடுக்க   வேண்டும்”,  சட்ட   நடவடிக்கை  பற்றிக்  கவலைப்படாமல்     ஊகங்களை    அள்ளி  வீச   வேண்டும்   என்றார்.

“எல்லாருமே   நம்பிக்கை   இழந்து  விட்டார்கள்.   குறிப்பாக    தீவகற்பத்தில்    உள்ள  என்   சகாக்கள்.  அவர்கள்   எதிர்க்கட்சியில்   இருந்ததில்லை. சாபாவில்  உள்ள  நான்   15  ஆண்டுகள்    எதிர்க்கட்சியாக    இருந்துள்ளேன்.  அதனால் எனக்கு  இது  புதிதல்ல”,  என்றாரவர்.

1994-இல்   பார்டி   பெர்சத்து   சாபா(பிபிஎஸ்)  உறுப்பினர்கள்  மூவர்   கட்சித்தாவி   வந்ததை   அடுத்து   பிஎன்  சாபாவில்    ஆட்சி  அதிகாரத்தை  ஏற்குமுன்னர்   எதிரணியில்   இருந்ததைதான்   கினாபாத்தாங்கான்   எம்பி  குறிப்பிடுகிறார்.

அதற்குமுன்  பிபிஎஸ்  ஒன்பதாண்டுகள்   சாபாவை    ஆட்சி   செய்தது.   அதற்கு  முன்பு  சாபா  மக்கள்  ஐக்கிய  முன்னணி.

“எப்படி  எதிர்கட்சியாக   இருப்பது   என்பதை     அவர்கள்   கற்றுக்கொள்ள    வேண்டும்.

“நம்  கட்சியை   வலுப்படுத்த   வெண்டும்.  முன்பு   எதிரணியினர்  எப்படிப்    போராடினார்களோ   அப்படிப்   போராட    வேண்டும்.

“அவர்கள்  அப்போதைய  (பிஎன்) அரசாங்கத்தை  விடாமல்   தாக்கினார்கள். ஊகங்களை   அள்ளி  வீசினார்கள்.    அதன்  விளைவாக     அவர்கள்மீது  வழக்கு   தொடரப்பட்டது.  எதைப்  பற்றியும்   கவலைப்படாமல்    அம்னோவையும்   பிஎன்னையும்   தொடர்ந்து    சாடினார்கள்.

“நாமும்  அதைச்   செய்ய   வேண்டும்.   முந்தைய   எதிரணியினரைவிட   சிறப்பாக   செயல்பட  வேண்டும்”,  என்று  பங்   கூறினார்.