கேமரன் கிராமவாசிகள்: அமைச்சு குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டும்

கேமரன் மலையைச் சேர்ந்த கிராமவாசிகள் குழுவொன்று, தங்கள் வீடுகள் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்றதாக தங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை உள்துறை அமைச்சிடம் வழங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களின் சார்பிலும் மேம்பாட்டாளர் வீடுகள் உடைப்பதைத் தடுத்து உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டோரை மிரட்டியதாக குற்றவியல் சட்டம்  341, 506ஆவது பிரிவுகளின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரின் சார்பிலும்  கேமரன் மலை பிஎஸ்எம் தலைவர் சுரேஷ் குமார் அதனை வழங்கினார்.

“அந்தக் குடும்பங்கள் 30-திலிருந்து 50 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்துள்ளனர்….அவர்களிடம் நிலப் பட்டா இல்லை.ஆனால், மதிப்பீட்டு வரி செலுத்தி வந்திருக்கிறார்கள். தெனாகா நேசனல் அவர்களுக்கு மின்சாரம் வழங்கி வந்திருகிறது”, என்று சுரேஷ் கூறினார். அவ்விருவருடன் வீடுகள் உடைப்பதைத் தடுத்ததாக அவர்மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கீரீன் கவ், கேஇஏ பண்ணை ஆகியவற்றைச் சேர்ந்த அக்குடும்பங்களுக்கு மேம்பாட்டுப் பணி பற்றியோ இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்றோ தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான் அவர்களும் சுமார் 15 சமூக ஆர்வலர்களும் கிராமவாசிகளும் அக்டோபர் 13-இல் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்றாரவர்.

“மேம்பாட்டாளர் இரண்டு மாதங்களுக்குமுன் வேலையைத் தொடங்கினார்…அவர்களின் ட்ரெக்டர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் நாங்கள் மூவரும் அவை மேலும் முன்னேறிச் செல்லாதபடி தடுத்தோம்”, என்று அவர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேம்பாட்டாளர்களின் பிரதிநிதி இங் ஈட் இங், மேம்பாட்டுப் பணிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை எங்களிடம் காண்பிக்கவில்லை. விசாரித்துப் பார்த்ததில் அதற்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது என சுரேஷ் கூறினார்.

“எட்டு முறை போலீசில் புகார் செய்து விட்டோம். ஊராட்சி மன்றத்தின் உதவியையும் நாடினோம், சுற்றுசூழல் தாக்கம் மீதான அறிக்கையையும் தருமாறும் கேட்டோம்.அதிகாரிகளிடமிருந்து பதிலே இல்லை.

“அது ஒரு மலைச்சரிவு.கடந்த காலங்களில் அங்கு நிலம் மேம்படுத்தப்படுவதால் நிலச் சரிவு ஏற்பட்டது உண்டு.

“நாங்கள் அதைத் தடுக்க முயன்றோம்…..அதனால் எங்களுக்குத்தான் போலீசார் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேம்பாட்டாளருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்”, என்று சுரேஷ் வருத்தப்பட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சுரேஷும் எஸ். தனபாலனும் ஆளுக்கு ரிம3,000 பிணையிலும் எஸ். நாகராஜன் என்பார்  ரிம5,000 பிணையிலும் விடுவிக்கப் பட்டனர்.

சுங்கை சிப்புட் பிஎஸ்எம் எம்பியான டாக்டர் டி.ஜெயக்குமாரும் குவாந்தான் பிகேஆர் எம்பி பவுசியா சாலேயும் போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்ததுடன் உள்துறை அமைச்சு தலையிட்டுக் குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.