1மலேசியா கிளினிக்ஸ்கள் ‘சமூக கிளினிக்ஸ்’களாக மாற்றப்படும்

 

நாடு தழுவிய அளவில் அனைத்து 1மலேசியா கிளினிக்ஸ்களும் ‘சமூக கிளினிக்ஸ்’களாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மருத்துவர்கள் மற்றும் மருந்து தயாரித்துக் கொடுப்பவர்களும் அனுப்பப்படுவர்.

தேசிய அளவில் அவ்வாறான அனைத்து கிளினிக்ஸ்களையும் சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்து அவற்றில் மிகுந்த பயன் தரும் அளவை எட்டாதவற்றை மூடிவிடுதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டிசுல்கிப்ளி அஹமட் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“நாங்கள் இந்த கிளினிக்ஸ்களுக்கு புதிய பெயர் கொடுக்க முடிவெடுத்துள்ளோம், சமூக கிளினிக்ஸ் (கொம்மியூனிட்டி கிளினிக்ஸ்) என்று அவர் அறிவித்தார்.

இந்த கிளினிக்ஸ்களில் மருத்துவர்கள் இல்லாதிருந்ததாக முன்பு குறைகூறப்பட்டதைச் சுட்டி காட்டிய அவர், இப்போது அவற்றுக்கு மருத்துவர்கள் அனுப்பப்படுவர் என்றும் மருந்து தயாரித்து கொடுத்தல் சேவை மறுமாற்றம் செய்யப்பட்டு மருந்து தயாரித்து கொடுப்பவர் அல்லது துணை மருந்து தயாரித்து கொடுப்பவர் நியமிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

இந்த மறுமாற்றம் மற்றும் தரம் உயர்த்தும் திட்டத்திற்கு ரிம5 லிருந்து ரிம10 மில்லியன் வரையில் செல்வாகும் என்று அவர் கூறினார். ஆனால், திட்டவட்டமான ஒரு தொகையை அவர் குறிப்பிடவில்லை.

இந்த நடவடிக்கை அமலாக்கம் செய்யப்படுவதற்கு மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரையில் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.