மூன்று அவசரகாலப் பிரகடங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் சமர்பித்த பிரேரணையை மக்களவை இன்று ஏற்றுக் கொண்டது.
அதன் மீதான விவாதத்தின் போது எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யாட் சில விஷயங்களில் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தன.
இந்தோனிசியாவுடன் பகைமைப் போக்கு நிலவிய காலத்தில் 1964ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்ட இன்னொரு அவசரகாலம் நடப்பில் இருக்கிறது என்றும் அது பிரேரணையில் சேர்க்கப்படவில்லை என்றும் பக்காத்தான் கூறியது.
எதிர்த்தரப்பு எம்பி-க்களான லிம் கிட் சியாங் (டிஏபி- ஈப்போ தீமோர்), சலாஹுடின் அயூம் (பாஸ் குபாங் கெரியான்) கர்பால் சிங் (டிஏபி-ஜெலுத்தோங்) பிரேரணை மீதான விவாதத்தின் போது அந்த விஷயத்தை எழுப்பினர்.
விவாதத்தை நிறைவு செய்து வைத்துப் பேசிய நஸ்ரி அந்த கூற்றை நிராகரித்தார். 1964ம் ஆண்டு வெளியிடப்பட்ட பகைமைக் கால அவசர காலப் பிரகடனம் காலவதியாகி விட்டதாக அவர் விளக்கினார்.
“தான் பூன் லாய் வழக்கில் பிரிவி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி நடப்பு அவசர காலப் பிரகடனம், அதற்கு முந்திய அவசர காலப் பிரகடனத்தைக் காட்டிலும் மேலானதாகக் கருதப்பட வேண்டும். நாங்கள் அந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளோம்,” என விளக்கிய நஸ்ரி 1969ம் ஆண்டு தேசிய அவசர காலப் பிரகடனம் 1964ம் ஆண்டு அவசர காலத்தை செல்லாததாக்கி விட்டது என வாதாடினார்.