சிவில் சமூக குழுக்கள், அதில் ஜூலை பேரணியில் கலந்துகொண்ட பெர்சே 2.0 உறுப்பினர்களும் அடங்குவர், அமைதியான கூடுதல் மசோதா 2011 க்கு எதிராக கடுமையாகப் போராடப் போவதாக சூளுரைத்தன.
சுதந்திரமாக கூடுதலுக்கான போராட்டம் (கேகேபி) என்ற அந்த அமைப்பு அதன் போராட்டத்தை ஒரு சிறிய அளவில் இன்று நாடாளுமன்றத்தின் முன் நடத்தியது.
ஆனால், அந்த அமைப்பு இன்னும் பெரிய கூட்டத்தினரை வரும் சனிக்கிழமை பிற்பகல் மணி 2.00 க்கு கேஎல்சிசியில் நடத்தத் திட்டமிட்டிருக்கும் கூட்டத்தில் எதிர்பார்க்கிறது.
“மலேசியர்கள் சுதந்திரமாக நடக்கலாம்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் போராட்டம் அதிகமான குடிமக்களை ஈர்க்கும் நோக்கம் கொண்டுள்ளது.
“நீங்கள் பதாதைகளையோ, சுவரொட்டிகளையோ கொண்டுவர வேண்டியதில்லை. வாருங்கள், நம்மால் ஒரு சாதாரண ஏற்பாட்டுடன் எப்போதும் எங்கு வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்ய இயலும் என்பதை போலீசாருக்கு உணர்த்துவோம் – நாம் வெறும் மஞ்சள் உடை மட்டும் அணிந்திருப்போம்.
“நீங்கள் விடுக்கும் செய்தியைத் தெளிவாகக் காட்ட விரும்பினால், ஒரு மலேசிய கொடியை கொண்டு வாருங்கள். அக்கொடி நமது சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது”, என்று அப்போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வோங் சின் ஹுவாட் கூறினார்.
அன்றைய தினமே டத்தாரன் மெர்தேக்காவில் மெழுகுவத்தி ஏந்திய விழிப்பு நிலை நிகழ்ச்சிக்கும் கேகேபி ஏற்பாடு செய்துள்ளது. அந்நிகழ்ச்சி இரவு மணி 8.00 க்கு தொடங்கும். இவ்விவகாரம் குறித்த ஒரு பொதுக்கருத்தரங்கம் நவம்பர் 29 இல் கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெறும்.
ஆஸ்திரேலியாவில் பெர்த் நகர், டாஸ்மானியாவிலும், லண்டன் மற்றும் கோங்ஹாங் ஆகிய இடங்களில் வாழும் மலேசியர்கள் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று வோங் கூறினார்.