இந்தியர்களின் அடையாளப் பத்திரங்கள் விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டது, சேவியர்

 

இவ்வாரம் திங்கட்கிழமை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மறுநாள் புத்ரா ஜெயாவிலுள்ள நீர் நிலம் இயற்கை வள அமைச்சில்  அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து  அமைச்சரவை பணிகள் குறித்து விளக்கம் பெற்றதாக கூறினார்

தமது அமைச்சின் பணிகள் முன்பு நீர், மின்சாரம், பச்சை தொழில்நுட்பம், இயற்கை வளம், சுற்றுச்சூழல், விஞ்ஞானத் தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு என்று மிகப் பரந்த அளவில் பற்பல துறைகளைக் கொண்டதாக இருந்தது. இப்போது சில துறைகள் மற்ற அமைச்சுகளுடன் பரிமாறப்பட்டு  நீர், நிலம் இயற்கை வள அமைச்சாகப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஆக, இந்த அமைச்சின் கீழ் சில அவசரப் பணிகள் தேக்கம் கண்டுள்ளன என்பது தமது கவனத்திற்குக்  கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவற்றில் முக்கியமான இரண்டு விவகாரங்கள் சிலாங்கூர் தண்ணீர் நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் பகாங் பொக்சைட் கனிமவள மாசு விவகாரமாகும் என்று அவர் விவரித்தார்.

 

சிலாங்கூர் தண்ணீர் தட்டுப்பாடு விவகாரம்

 

“சிலாங்கூர் அரசாங்கத்தில் அங்கம் பெற்றிருந்த ஒரு முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற ரீதியிலும், சிலாங்கூர் நீர் சேவை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் என்ற ரீதியிலும், இந்த விவகாரம் எனக்கு மிகப் பரிச்சயமானதுடன் மாநில  அரசுடன் எனக்குள்ள நல்லுறவால் இவ்விவகாரத்தைக் கூடிய விரைவில் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்”, என்று சேவியர் மேலும் கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு விவகாரத்தை தீர்க்கக்கூடியதாக அமையும்  என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட இன்று (ஜூலை 5) காலை மேற்படி ஆலைக்கு வருகையளித்தார்.

 

இந்தியர்களின் அடையாளப் பத்திரங்கள் விவகாரம் அமைச்சரவையில்

 

அத்துடன், நேற்று 4 ஆம் தேதி, புதன்கிழமை தான் கலந்து கொண்ட முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டாலும், இந்தியர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கும் அடையாளப்  பத்திர விவகாரமும் அமைச்சரவையின்  கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்று சேவியர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் பக்காத்தான்  அரசின் தீவிர ஈடுபாட்டை உணர்த்தும் வண்ணம் அமைச்சரவையிலுள்ள மூன்று இந்திய அமைச்சர்களான எம்.குலசேகரன், கோபிந்த் சிங் டியோவுடன் தானும் இடம் பெற்றுள்ளதாகவும், சில  அரசு சார இயக்கங்களும் இந்த அடையாளப் பத்திர விவகாரச் சிறப்பு பணிக்குழுவில் இடம் பெறும் என்றாரவர்.

அடையாளப் பத்திர விவகாரத்தை இலகுவாகத் தீர்க்கச் சில கெடுபிடிகள் நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் சில  தளர்த்தப்படவேண்டியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

“எது எப்படியானலும், நூறு நாட்களில் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காணும் இலக்குடன் சில நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்  அடிப்படையில், முதல் கட்டமாகச்  சில ஆயிரம்  அடையாளப் பத்திரங்களின் பிரச்சனைகளுக்கு இந்த 100 நாள்களில் தீர்வுகாணப்படும்”, என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.