குடியுரிமைக்கு மாற்றாக வாக்குகள் என்னும் மோசடித் திட்டம் மீண்டும் தலையெடுத்துள்ளது. அதனைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறும் பாஸ், கடந்த மாதம் குடியுரிமை வழங்கப்படுவதற்காக நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டவரை புத்ராஜெயாவுக்குப் பேருந்துகளில் அழைத்துச் சென்ற அதே கும்பல்தான் இத்திட்டத்தின் பின்னணியிலும் இருப்பதாகக் குறிப்பிட்டது.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ் இளைஞர் பகுதி பொருளாளர் முகம்மட் அட்ராம் மூசா, அக்கும்பலின் தலைவர் வெளிநாட்டவரடங்கிய ஒரு கூட்டத்துடன் செப்பாங்கில் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
“(புதன்கிழமை) அந்நபர் காணப்பட்டிருக்கிறார். அவர்கள் ஏற்கனவே செய்ததுபோல் வெளிநாட்டவருக்கு அடையாளக் கார்ட் கொடுப்பதற்காக அவர்களைப் பதிவு செய்ய முயல்வதாக சந்தேகித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது”, என்றாரவர்.
தகவல் கிடைத்தவுடன் பாஸ் கட்சியின் சமூக ஆர்வலர்கள் போலீசையும் அழைத்துக்கொண்டு செப்பாங்கில் முன்சொன்ன கும்பலின் தலைவர் காணப்பட்ட விவசாயச் சுற்றுலா, பயிற்சி மையத்துக்குச் சென்றதாக அட்ராம் கூறினார்.
“எங்களைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். நாங்கள் செப்பாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம்”.
அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டார்கள்.
“சந்தேகப் பேர்வழிகளில் ஐவர் 71 என்ற குறியீட்டு எண் கொண்ட மைகார்டுகள் வைத்துள்ளனர்.அது, அவர்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது. அவர்களும் நிரந்திர வசிப்பிடத் தகுதிகொண்ட மேலும் இருவரும் விசாரிக்கப்படுகின்றனர்”, என்று அட்ராம் கூறினார்.
தகவல் அளிக்க போலீஸ் தயக்கம்
நேற்று செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் இம்ரான் அப்துல் ரஹ்மானைத் தொடர்புகொண்டபோது அவர் அச்சம்பவம் தொடர்பாக சிலர் விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.
ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை என்றார். அது பற்றி மேல்விவரம் தெரிவிக்கவும் மறுத்தார்.
அட்ராம், உள்துறை அமைச்சர் இதைக் கவனிக்க வேண்டும் என்றும் இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் போலீசார் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அக்டோபர் 12-இல், சிலாங்கூர் பாங்கியில் ஆறு பேருந்துகளில் வந்த வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கும் முயற்சி நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் அவ்வட்டார மக்கள் சிலரும் அங்கு புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது, இம்ரானும் தேசியப் பதிவுத்துறையும் அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நிகழவில்லை என்று மறுத்தனர். வெளிநாட்டவர் தொழில்முனைவர் பயிற்சி பெற அங்கு சென்றிருந்தார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.