அரிப் மக்களவைத் தலைவர்: மகாதிர் உறுதிப்படுத்தினார்

பிரதமர்     டாக்டர்     மகாதிர்     முகம்மட்     பக்கத்தான்    ஹரப்பானின்     புதிய    மக்களவைத்    தலைவர்   வேட்பாளர்    முன்னாள்     முறையீட்டு    நீதிமன்ற   நீதிபதி    முகம்மட்    அரிப்    முகம்மட்  யூசுப்-தான்   என்பதை   இன்று    உறுதிப்படுத்தினார்.

செய்தியாளர்   கூட்டமொன்றில்   மகாதிரிடம்  மக்களவைத்    தலைவர்   யார்   என்று   வினவியதற்கு    “அவர்   ஒரு  முன்னாள்   நீதிபதி”   என்றவர்  சொன்னார்.

முகம்மட்  அரிப்தான்   அவரா   என்று  மீண்டும்   அவரிடம்   வினவப்பட்டதற்கு “ஆமாம்”   என்றார்.

இன்று  காலை   சரவாக்கில்   அம்மாநில    அரசுடன்   பேச்சு   நடத்திவிட்டு,  செய்தியாளர்களைச்   சந்தித்த   மகாதிர்   அவ்விவகாரம்   தொடர்பில்   விரைவில    அறிக்கை   வெளியிடப்படும்    என்றார்.

அரிப்,     நியமனத்துக்கு   உடனடியாக    தம்   நன்றியைத்     தெரிவித்துக்  கொண்டார்.

இதற்குமுன்   மலேசியாகினி    அரிப்,       பிகேஆரின்   ஜொகாரி   அப்துல்-   இந்த   இருவரில்   ஒருவரே   மக்களவைத்    தலைவராக   நியமிக்கப்படுவார்  என்று  ஆருடம்  கூறியிருந்தது   குறிப்பிடத்தக்கது.

அரிப்  2012  தொடங்கி   2015வரை  முறையீட்டு   நீதிமன்ற    நீதிபதியாக     இருந்துள்ளார். 2015-இல்   அவர்   பணி  ஓய்வு   பெற்றார்.

இப்போது   அவர்  அமனா   கட்சியின்   கட்டொழுங்குக்  குழுத்    தலைவராக   உள்ளார்.

ஹரப்பான்   அரிப்பை  மக்களவைத்    தலைவர்  வேட்பாளர்   என்று    அறிவித்திருந்தாலும்    அவர்   மக்களவைத்    தலைவராவாரா  இல்லையா   என்பது   நாளை    மக்களவை   கூடும்போதுதான்    தெரிய   வரும்.   ஏனென்றால்    அவரது   பெயர்     உரிய   நேரத்தில்   சமர்ப்பிக்கப்பட்டதா    என்பது   தெரியவில்லை.

நாடாளுமன்ற   நிலை   ஆணைகளின்படி   மக்களவைத்   தலைவர்    பதவி   வேட்பாளர்களின்  பெயர்கள்      நாடாளுமன்றம்   கூட்டத்துக்கு   14   நாள்களுக்குமுன்    சமர்ப்பிக்கப்பட    வேண்டும்.

துணைப்  பிரதமர்   டாக்டர்   வான்   அசிசா   ஹரப்பான்   ஜூலை  9-இல்தான்   ஒரு  பெயரை  முடிவு    செய்தது    என்று   கூறியுள்ளார்.  அதன்படி    பார்த்தால்  குறிப்பிட்ட   காலக்  கெடுவுக்குள்    பெயர்   சமர்ப்பிக்கப்படவில்லை    என்றாகிறது.

ஆனால்,  நடப்பில்  சட்ட   அமைச்சர்   லியு   வூய்   கியோங்  ஜூலை  2ம்  நாளே   பெயர்    சமர்ப்பிக்கப்பட்டதாகக்  கூறியுள்ளார்.