அஸ்மின்:சிறைகளை உடைத்து அன்வாரை விடுவிப்போம்

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, கட்சியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குக் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி அவர் சிறை இடப்பட்டால் கிளர்ச்சி மூளும் என்று எச்சரித்தார்.

இன்று ஜோகூரில், கட்சி காங்கிரசில் கொள்கை உரையாற்றிய அஸ்மின், தங்கள் தலைவரை மீண்டும் சிறையில் தள்ளினால் அவரை விடுவிக்க கட்சி போராடும் என்று சூளுரைத்தார்.

“இது அம்னோவுக்கு விடுக்கப்படும் கடும் எச்சரிக்கை. அன்வார் இப்ராகிமை சிறையில் தள்ள அவர்கள் சதி செய்தால் நாங்கள் சிறைக்கூடத்தின் கொடிய சுவர்களை உடைத்தெறிந்து அவரை விடுவிப்போம் என்று சூளுரைக்கிறோம்.

“பக்காத்தான் ரக்யாட், அன்வார் இப்ராகிமை ஏழாவது பிரதமர் ஆக்க உறுதிபூண்டிருக்கிறது”, என்று அஸ்மின் அறிவித்ததைக் கூட்டத்தினர் பலத்த கரவொலியுடன் வரவேற்றனர்.

நாளை கோகூரில் முதல்முறையாக கட்சியின் எட்டாவது ஆண்டுக் காங்கிரஸ் நடைபெறவுள்ள வேளையில் அஸ்மின் இன்று அதன் இளைஞர், மகளிர் பகுதிக் கூட்டங்களைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன், “காப்பாற்றப்படாத வாக்குறுதிகள்” பற்றியெல்லாம் தம் உரையில் குறிப்பிட்ட அஸ்மின், அம்னோவை இனியும் இனத்தின் பாதுகாவலராகக் கருத முடியாது என்றார்.

“இளைய தலைமுறையினர் அம்னோவை ஜனநாயகத்துக்கு எதிர்ப்பான, அறிவுவாதத்துக்கு எதிர்ப்பான, மனித உரிமைகளுக்கு எதிர்ப்பான, உழைப்பாளர்களுக்கு எதிர்ப்பான ஒரு பழைய கட்சியாக, ஊழலை ஆதரிக்கும் கட்சியாகத்தான் பார்க்கிறார்கள்.”

தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திகொள்ள இளஞர்களின் குரல்களை ஒடுக்கவும் அவர்கள் சிந்தனையை முடக்கிப்போடவும்  அம்னோ முயல்வதாக அவர் சாடினார்.

“சிந்திப்பவர்கள் அம்னோவின் எதிரிகளாகக் கருதப்படுவார்கள்.”

மாணவர்கள், தேசிய அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம் அரசமைப்புக்கு முரணானது என்ற முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதில் திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் கூறிய பின்னரும் மேல்முறையீடு செய்யப்படும் என்று பிடிவாதம் பிடிப்பது அரசாங்கத்தின் நேர்மைக் குறைவையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முரண்பாட்டையும்தான் காண்பிக்கின்றது என்றார்.

அடுத்த பொதுத் தேர்தலில் கூடுதல் இளம் வேட்பாளர்கள்

அரபுக் கிளர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் இளைஞர்கள்தான் என்பதைச் சுட்டிக்காட்டிய அஸ்மின்,  மாற்றங்களை இளைஞர்களே முன்னின்று நடத்த வேண்டும் என்றுதான் விரும்புகிறது என்றார்.

அந்த வகையில், கட்சி அடுத்த பொதுத் தேர்தலில்  அதிகமான இளம் வேட்பாளர்களைக் களம் இறக்கும்.

“மாநில தலைமைத்துவ மன்றங்கள், இளைஞர், மகளிர் பகுதிகள் எல்லாம் வேட்பாளர்களை நியமனம் செய்துள்ளன. இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் அவை நம்பிக்கை கொண்டிருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்றாரவர்.