ஜோகூர் அரசு எதிரணிக்கு உரிய மதிப்பளிக்க வேண்டுமாம்: சிலாங்கூர் சட்டமன்றத் தலைவர் கூறுகிறார்

“சிலாங்கூர்   சட்டமன்றத்    தலைவர்   இங்   சுவி  லிம்,   ஜோகூர்   எதிரணித்   தலைவர்  ஹஸ்னி   முகம்மட்டுக்கு    அம்மாநில   அரசு   கொடுக்கும்   ரிம1,000  மாத   அலவன்ஸ்  “மிகவும்  குறைவானது”   என்கிறார்.

அது  மாநில   எதிரணித்   தலைவர்   பதவிக்கு   உரிய  அங்கீகாரம்   கொடுக்கப்படவில்லை    என்பதைக்   காண்பிக்கிறது.மலேசியாகினிக்கு   வழங்கிய   நேர்காணலில்   இங்   அவ்வாறு   கூறினார்.

“அந்தத்  தொகை   குறைவு.  அதிகரிக்கப்பட   வேண்டும்   என்று   நினைக்கிறேன். ரிம1,000  என்பது  ஒப்புக்காகக்   கொடுக்கப்படும்   தொகையாகத்தான்   தெரிகிறது.

“ஜோகூர்  எதிரணித்   தலைவருக்கு   உரிய   மதிப்பளிக்க   வேண்டும்   எனக்  கேட்டுக்கொள்கிறேன்”,  என்றாரவர்.

எதிரணித்   தலைவரின்   வேலைச்சுமைக்கு  ஏற்ப   மாநில   அரசு   அவருக்கு  உரிய     அங்கீகாரத்தை  கொடுக்க   வேண்டும்  என்று  இங்   கூறினார்.

உரிய  அங்கீகாரமும்   அலவன்சும்  கொடுக்கப்பட்டால்    அதற்கேற்ப   அவர்களும்   செயல்படுவார்கள்.

கடந்த   வாரம்  ஹஸ்னி   ஜோகூர்  பக்கத்தான்   ஹரப்பான்   அரசு   எதிரணிக்கு  உரிய  அங்கீகாரம்  கொடுக்கவில்லை   என்றும்  மாநில  பொதுக்  கணக்குக்குழுத்     தலைவராக   எதிரணித்   தலைவரை  நியமிக்கும்  எண்ணம்  அதற்குக்  கிடையாது   என்றும்  குறைகூறியிருந்தார்.

ஜோகூர்   எதிரணித்   தலைவருக்கு   ரிம1,000  மாத  அலவன்ஸ்  கொடுப்பதோடு   ஒரு  அலுவலகமும்   கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால்,  பணியாளர்கள்  கொடுக்கப்படவில்லை.

சிலாங்கூரில்   எதிரணிக்கு   உரிய   மதிப்பளிக்கும்   வகையில்  மாநில    அரசு    சட்டத்  திருத்தம்   செய்திருப்பதாக  இங்   தெரிவித்தார்.

மாநில   எதிரணித்   தலைவருக்கான   அலவன்ஸ்   தொகையை   அதிகரிப்பது  பற்றியும்   ஆலோசித்து   வருவதாக    அவர்   சொன்னார்.

“இப்போது   எதிரணித்  தலைவருக்கு  ரிம3,000  கொடுக்கிறோம். இது   போதுமானதல்ல   என்று  நினைக்கிறேன்.

“எதிரணித்   தலைவரின்  செயல்பாட்டைக்  கண்காணிக்கச்  சொல்லியிருக்கிறேன்.  திருப்திகரமாக  இருந்தால்   அவருக்கான   அலவன்சை  அதிகரிக்க   பரிந்திரைப்பேன்”,  என்றார்.