அம்பிகா: பர்மிய சட்டம்கூட தெரு ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கிறது

2011 அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு, அண்மையில் பர்மிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதேபோன்ற சட்டத்தை விடவும் அடக்குமுறை மிக்கதாக இருக்கிறது என பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.

“நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. பர்மா  நம்மைவிட ஜனநாயகத்துக்குக் கூடுதல் இடமளிக்கும் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

“மலேசியர்களுக்குக் கூடுதல் ஜனநாயகம் வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. ஆனால் நடப்பு அதற்கு எதிராக உள்ளது”, என்று வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரான அம்பிகா குறிப்பிட்டார்.

இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்பிகா, பர்மாவின் புதிய சட்டம் தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதிப்பதாகவும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி அதிகாரிகளுக்கு ஐந்து நாள் முன்கூட்டியே தெரிவித்தால் போதும் என்றார்.

ஆனால், அதற்கு நேர்முரணாக மலேசியாவின் அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு, தெரு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்வதுடன் பேரணி குறித்து 30-நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது என்றாரவர்.

இதை வைத்துப் பார்த்தால், ஜனநாயக உரிமைகள் மலேசியாவைவிட பர்மாவில்தான் ஆறு மடங்கு அதிகம் உள்ளன என்று பெர்சே செயலக உறுப்பினர் வோங் சின் ஹுவாட் கூறினார்.

பர்மா, 1962-இலிருந்து இராணுவ ஆட்சியில் உள்ள ஒரு நாடு. அங்கு மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுவதுண்டு.