சிலாங்கூர் ஜக்காத் நிர்வாகத்தை தாம் குறை கூறியதாக சொல்லப்படுவதை முனைவர் மறுக்கிறார்

சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா நேற்று நிகழ்த்திய உரை ஒன்றில் சிலாங்கூர் ஜக்காத் நிர்வாகத்தை தாம் தாக்கியதாக கூறப்பட்டதை மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி மறுத்துள்ளார்.

“நான் சிலாங்கூரில் நடப்பு ஜக்காத் நிர்வாகத்தை குறை கூறவில்லை. சுல்தானுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் நான் எதிர்காலம் குறித்த அச்சத்தை மட்டுமே தெரிவித்தேன்.”

அத்துடன் பள்ளிவாசல்கள், ஜக்காத், மற்றும் இதர விஷயங்கள் மீது ஒரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நான் கூறியிருந்தேன்,” என மலேசியாகினிக்கு இன்று அனுப்பியுள்ள மின் அஞ்சலில் அரசமைப்புச் சட்ட வல்லுநருமான அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

ஷா அலாமில் நேற்று சிலாங்கூர் கணக்காய்வுத் துறையின் ‘விஸ்மா ஆடிட்’ கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய சிலாங்கூர் சுல்தான், சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம். சிலாங்கூர் ஜக்காத் வாரியம் ஆகியவற்றின் கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றும் அவற்றுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அப்துல் அஜிஸும் கூறியுள்ளது, தமக்கு “ஆழ்ந்த வருத்தத்தை” தந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் அஜிஸ் பதில் அளித்தார்.

அந்த குறிப்பிட்ட திருத்த மசோதாவை “வழக்கத்திற்கு மாறான வழிகளில்” நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் செய்யப்படுவதில் தொடர்பில் தமது கருத்துக்கள் அமைந்திருந்ததாக அவர் விளக்கினார். சிலாங்கூர் சுல்தான் “சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக” கூறப்பட்டுள்ளது.

ஜக்காத் நிர்வாகம் மீது மாநில சுல்தானுக்கு முழு அதிகாரம் வழங்கும் அந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என சுல்தான், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரசு பிறப்பித்துள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. அதன் தொடர்பில் மசோதாவுக்கு அப்துல் அஜிஸ் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

“ஜக்காத் நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் நான் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகிறேன். நடப்பு நிலையைப் பற்றி அல்ல,” என விளக்கிய அவர், அரசமைப்புச் சட்டம் மீதான வல்லுநர் என்ற முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும் சொன்னார்.

“நான் சிலாங்கூரில் ஜக்காத் செலுத்துகிறேன்,”என அப்துல் அஜிஸ் மேலும் கூறினார்.
 
அதன் அடிப்படையில் தம்மைப் பற்றி சுல்தான் கூறியது “தவறு” என அவர் வாதாடினார்.

“அவருக்கு தவறாக ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஆகவே நான் அவர் விரும்பினால் அவரைச் சந்தித்து விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்”, என அப்துல் அஜிஸ் சொன்னார்.

தாம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகள் மீதும் விளக்கமளிக்க சுல்தான் முன்பு ஆஜராவதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.