கூட்ட மசோதாவை எதிர்த்து வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் செல்வர்

மக்களவையில் சமர்பிக்கப்பட்டுள்ள அமைதியாகக் கூடும் மசோதாவை ஆட்சேபிக்கும் பொருட்டு கோலாலம்பூரில் நடத்தப்படும் ஊர்வலம் ஒன்றில் பங்கு கொள்ளுமாறு ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களை மலேசிய வழக்குரைஞர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை மணி 11.30க்கு அந்த ஊர்வலம் தொடங்கும். வழக்குரைஞர்கள் அரச லேக் கிளப்-பிலிருந்து ( Royal Lake Club) நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்வர்.

எதிர்க்க வேண்டிய மசோதா

மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் அதிகாரப்பூர்வமான அறிக்கை “சுதந்திரத்திற்கான நடை 2011: அமைதியான கூடுதல் மசோதா சட்டம் ஆகக் கூடாது, ஆகவேக் கூடாது!” அதன் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் தலைவர் லிம் சீ வீ அந்த மசோதாவை ஒரு “வெறுக்கத்தக்க மசோதா” என்று வர்ணித்துள்ளார்.

அதே தினத்தன்று காலை அந்த மசோதா மீது மக்களவை விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைதியாகக் கூடும் மசோதா நவம்பர் 22ம் தேதி சமர்பிக்கப்பட்டது.

ஊர்வலத்தின் முடிவில் அரசாங்கத்திடம் மகஜர் ஒன்றும் கொடுக்கப்படும்.

2007ம்  ஆண்டு வழக்குரைஞர்கள் மன்றம் நடத்திய ‘நீதிக்கான நடை’ என்னும் ஊர்வலத்தில் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். அம்பலமான “லிங்கம் ஒளிநாடா” விவகாரம் மீது அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் புத்ராஜெயாவில் அந்த 3.5 கிலோமீட்டர் நீள ஊர்வலம் நடத்தப்பட்டது.

அந்த ஊர்வலத்துடன் பொது மக்களும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவி, முன்னாள் மலாயாத் தலைமை நீதிபதி ஹைடார் முகமட் நூர் தலைமையில் அரச விசாரணை ஆணையத்தை அமைக்க ஒப்புக் கொண்டார்.