பினாங்கு அம்னோ ‘நெறிமுறையற்றது, கட்டுக்கோப்பு இல்லாதது’ எனக் குறை கூறப்பட்டுள்ளது

மலாய்க்காரர்கள் அம்னோ தலைவர்களுடைய அரசியலில் ஈடுபடுவதின் மூலம் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதாக பினாங்கு டிஏபி தலைவர் ஒருவர் சாடியிருக்கிறார்.

இன்றைய அம்னோ ‘நெறிமுறையற்றது, கட்டுக்கோப்பு இல்லாதது’ என மாநில டிஏபி மத்தியக் குழு உறுப்பினர் சுல்கிப்லி முகமட் நூர் கூறினார். அது மலாய்க்காரர்கள் முஸ்லிம்கள் ஆகியோரது உரிமைகளைத் தற்காப்பதற்குப் பதில் அரசியல் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டுவதாக அவர் சொன்னார்.

பினாங்கு மலாய்க்காரர்களுடைய நிலையை மேம்படுத்துவதற்கு மாநில அரசாங்கம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் கண்டிக்கும் போக்கை அந்தக் கட்சி பின்பற்றுவதாக அவர் குறை கூறினார்.

“அம்னோ தனது சொந்த நிழலைக் கண்டு கூட அஞ்சுகிறது. அந்தக் கட்சியை மலாய்க்காரர்களே நிராகரிக்கும் வரையில் காத்திருக்காமல் அந்தக் கட்சி தனது சொந்த இலட்சியங்களில் கவனம் செலுத்துவது நல்லது என நான் அறிவுரை கூறுகிறேன்,” என  அவர் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

“மலாய்க்காரர்கள் எழுச்சி பெற்று உதவித் தொகைகளைக் கோரும் நாடு என்னும் தோற்றத்தைப் போக்க வேண்டிய தருணம் வந்து விட்டது,” என்றும் பினாங்கு நகராட்சி மன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

“வரும் தேர்தலுக்கு சுமையாக இருக்கக் கூடிய வேட்பாளர்களைக் காட்டிலும் தரமான வேட்பாளர்களே தேர்வு செய்யப்பட வேண்டும். மலாய்க்காரர்கள் மற்ற சமூகங்கள் தங்களை மதிக்கும் வகையில் தங்கள் சிந்தனை ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றும் சுல்கிப்லி வலியுறுத்தினார்.

மலாய்க்காரர்களை டிஏபி தலைமையிலான பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் புறக்கணிப்பதாகவும் ஒதுக்குவதாகவும் அம்னோ தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது தொடர்பில் அவர் பதில் அளித்தார்.