மகாதிர்: பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை

 

பிகேஆர் விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் மகாதிர் இன்று வலியுறுத்திக் கூறினார்.

“நான் என்ன செய்துள்ளேன்? நான் அன்வார் அல்லது அஸ்மின் அல்லது வேறு யாரைப்பற்றியும் ஏதேனும் தவறாக கூறியதை யாராவது கேட்டதுண்டா?

“இது அவர்கள் கட்சி. நான் தலையிடுவதில்லை”, என்று மகாதிர் இன்று நாடாளுமன்றக் கட்டட முகப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஓர் ஆடியோ பதிவில் அன்வார் இப்ராகிம் அவரது துணைத் தலைவர் முகமட் அஸ்மினை “மகாதிரின் கையாள்” என்று கூறுவதாக பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி கருத்துரைக்குமாறு கேட்ட போது, மகாதிர் இவ்வாறு கூறினார்.

பிகேஆர் தலைவர்கள் அந்தப் பதிவைப் பொய்யானது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அஸ்மின் அது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்/றார்.

எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் எந்தப் பதவிக்கு போட்டியிடப் போகிறார் என்பதை அஸ்மின் இன்னும் அறிவிக்கவில்லை. அது அவர் தலைவர் பதவிக்கு அன்வாரை எதிர்த்து போட்டியிடக்கூடும் என்ற ஊகத்திற்கு இடமளிக்கிறது.

அஸ்மினை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக மகாதிர் நியமித்ததும் அவரை அன்வாருக்கு எதிராக வலுப்படுத்தும் திட்டம் என்று முன்னதாக கூறப்பட்டது.

ஆனால், அன்வார் மீதான தமது விசுவாசத்தை அஸ்மின் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார்.