சில கெடாய் ராக்யாட் சத்து மலேசியாப் பொருட்களின் தரம் மீது எழுந்துள்ள பிரச்னையைத் தீர்ப்பதற்குக் கலந்துரையாடலை நடத்தலாம் என டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா, சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய்-க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தாமும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வாரும் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட்டும் அந்தப் பொருட்கள் தரம் குறைந்தவை எனத் தாங்கள் கூறிய குற்றச்சாட்டுக்கள் தவறானவை என மெய்பிக்கப்பட்டால் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஒரே மலேசியா பொருட்களுக்கான தூதர்களாகவும் திகழத் தயாராக இருப்பதாகவும் புவா கூறினார்.
அதே வேளையில் லியாவ் சொல்வது தவறு என்றால் தவறு செய்தவர்கள் மீது “சட்டத்தின் கீழ் பொருத்தமான நடவடிக்கைகளை” சுகாதார அமைச்சர் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“அந்த விஷயங்கள் நாங்கள் அவரிடம் கொண்டு செல்லவில்லை என்று அவர் எங்களைக் குறை கூறுகிறார். ஆகவே நாங்கள் அந்தப் பொருட்கள் மீதான தகராற்றை ஒரு வழியாகத் தீர்த்துக் கொள்ள அவருடன் கலந்துரையாடலை நடத்த விரும்புகிறோம்,” என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டிஏபி தேசியத் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அந்தக் கலந்துரையாடல் நிகழும் என புவா நம்புகிறார். ஐஸ் கிரிம், தண்ணீர்ப் பால், கீரிமர், டின்களில் அடைக்கப்பட்ட சார்டின், டின்களில் அடைக்கப்பட்ட கோழி இறைச்சி, குழந்தைகளுக்கான பால் மாவு ( ice cream, evaporated milk, creamer, tinned sardines, tinned chicken curry, and growing up milk powder) ஆகிய சத்து மலேசியா பொருட்கள் மீது பிரச்னைகள் எழுந்துள்ளன.
அந்தக் கலந்துரையாடலில் மூன்று எம்பி-க்களும் லியாவ்-வும் பங்கு கொள்வர் அல்லது விவாதத்திற்குப் பொருத்தமானவர் என அமைச்சர் கருதும் யாரும் பங்கு கொள்ளலாம்.