பெர்சே: நஜிப்பின் கடைசி நேர வேண்டுகோள் ஒரு ‘தேர்தல் குற்றம்’

சுங்கை    கண்டீஸ்   இடைத்   தேர்தலில்    பிஎன்னுக்காக   மும்முரமாக   பரப்புரையில்    ஈடுபட்டு    வந்த     முன்னாள்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,  சிலாங்கூரில்    பக்கத்தான்   ஹரப்பானை    ஆட்சியிலிருந்து  இறக்கும்படி    வாக்காளர்களுக்குக்   கடைசிநேர  வேண்டுகோள்   ஒன்றை   விடுத்துள்ளார்.

அவர்  கடைசி  நேரத்தில்   முகநூலில்   இப்படி  ஒரு   வேண்டுகோள்  விடுத்தது   தப்பு   என்கிறது   தேர்தல்  சீரமைப்புக்காக   போராடி  வரும்   பெர்சே . அவ்வேண்டுகோள்    வாக்களிப்பு   நாளில்   பரப்புரைகளைத்   தடுக்கும்   தேர்தல்  சட்டங்களை  மீறுவதாக  உள்ளது  என்று  அது  கூறியது.

“வாக்களிப்பு   நாளில்  பரப்புரைகளில்   ஈடுபடுவது  தேர்தல்   சட்டம்  பகுதி 26(1) (ஏ)  மற்றும்   (எப்)-இன்படி   குற்றமாகும்”,  என   பெர்சே   செயல்முறை  இயக்குனர்  யாப்   சுவீ   செங்  மலேசியாகினியிடம்   கூறினார்.

மே  9  பொதுத்   தேர்தல்    தோல்வியை    அடுத்து     பிஎன்   தலைவர்    பதவியிலிருந்து    விலகிய     நஜிப்    இன்று  காலை   மணி  8க்கு  முகநூலில்   அந்த  வேண்டுகோளைப்  பதிவேற்றம்   செய்திருந்தார்.

அதில்  அவர்,   அரசாங்கம்   அது   அளித்த   வாக்குறுதிகளில்   பலவற்றை  இன்னும்   நிறைவேற்றாமலிருப்பதைச்   சுட்டிக்காட்டினார்.

“பெட்ரோல்  விலை  குறையவில்லை,  மக்கள்   இன்னுமும்  டோல்  கட்டணம்   செலுத்திக்கொண்டுதான்   இருக்கிறார்கள். பெல்டா  கடன்கள்   இரத்துச்   செய்யப்படவில்லை,  1எம்டிபிமீது   அரச  விசாரணை   ஆணையமும்   ஏற்படுத்தப்படவில்லை.இவைபோல்  இன்னும்  பல   வாக்குறுதிகளும்  குற்றச்சாட்டுகளும்   பொய்யாக   போய்விட்டன.

“ஜிஎஸ்டி  சுழியம்   விழுக்காட்டுக்குக்  குறைக்கப்பட்ட   பின்னரும்   விலைகள்   குறையவில்லை,    அடுத்த  மாதம்  விற்பனை,  சேவை   வரி    அமலுக்கு வரும்போது   விலைகள்  உயரப்  போகின்றன”,  என்றாரவர்.

அதன்  பின்   நஜிப்,  பிஎன்  வேட்பாளர்   லொக்மான்  நூர்   ஆடமுக்கு    ஆதரவாக   வாக்களிக்க    வேண்டும்    என   வாக்காளர்களுக்கு   வேண்டுகோள்  விடுத்தார்.  இன்றைய   தேர்தல்   வாக்குறுதிகளைக்  காப்பாற்றத   அரசாங்கத்துக்கு   அதைச்  சுட்டிக்காட்ட   நல்ல  வாய்ப்பு   என்றாரவர்.

“சுங்கை  கண்டீஸ்  மற்றும்  சிலாங்கூர்  மக்களின்  நலனுக்காக,    பிஎன்  வேட்பாளர்  லொக்மானை   ஆதரித்து   எதிர்க்கட்சியின்   குரல்  உரக்க  ஒலிக்க  பிஎன்னுக்கு  ஒரு   வாய்ப்பு  கொடுங்கள்”,  என்று   நஜிப்   கேட்டுக்கொண்டார்.