நாட்டிற்காக எப்போதும் சிறந்ததையே நினைக்கும் தலைமை சட்டத்துறை தலைவர் (ஏஜி) ‘இக்குவானிமிட்டி’ வழக்கின் வழக்கறிஞர் குழுவில் தனது முன்னாள் சக பணியாளரையே நியமித்துள்ளார் என பிரதமர் துறை அமைச்சர் ஹனீபா மைடின் கூறினார்.
“அனுபவம் வாய்ந்த நமதரேஜி, சிறந்த முடிவுகளில் ஆர்வமுள்ளவர், எனவே அவர் தனது அணியில் சிறந்தவர்கள் மட்டும் இருக்க விரும்புகிறார்.
“அவர் சாதாரணமாக விஷயங்களில் சமரசமாக மாட்டார்,” என இன்று ஓர் அறிக்கையில் ஹனீபா மைடின் கூறியுள்ளார்.
அந்நியமனத்தில் – முரண்பாடுகள் உண்டு எனக் குறை கூறியுள்ள அம்னோ இளைஞர் தலைவர்களுக்கு – முடிவெடுக்கும் முழு உரிமை ஏஜிக்கு உண்டு என்றார் அவர்.
“எனவே, அம்முடிவை மதிக்க வேண்டும்,” என்றார் அவர்.
தனது முந்தைய சட்ட நிறுவனத்தில் இருந்த சக பணியாளர் சித்பா செர்வரத்னம் என்பவரை, ஆடம்பரக் கப்பல் இக்குவானிமிட்டி வழக்கு சட்ட நிபுணர்கள் குழுவில், ஏஜி டோமி தோமஸ் நியமித்தது தொடர்பில் ஹனீபா இவ்வாறு கருத்துரைத்தார்.
1எம்டிபி நிதியில் வாங்கப்பட்ட கப்பல் அது என முன்னர் கூறப்பட்டது.
“நிச்சயமாக எல்லோருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. இது புதிய மலேசியா, இத்தகைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் ஹனீபா தெரிவித்தார்.
சித்பா எந்தவொரு கட்டணத்தையும் பெறாததால், அவரின் நியமனத்தில் எந்தவொரு சுய ஆர்வத்திற்கும் இடமில்லை என்று தோமஸ் முன்பு விளக்கியிருந்தார்.
நாட்டின் பிரதான கப்பல் வக்கீல்களில் 25 ஆண்டு கால அனுபவத்துடன், அட்மிரல்ட்டி மற்றும் கப்பல் போக்குவரத்து சபையின் சட்டக் குழுத் தலைவர் மற்றும் கடல்சார் சர்வதேச சட்டத்திற்கான சங்கத் தலைவர் ஆகிய தகுதிகள் அடிப்படையில் சித்பா இக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தோமஸ் கூறியிருந்தார்.