தியோ பெங் ஹொக் தற்கொலை செய்துகொண்டார் என்ற அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) தீர்ப்புக்கு எதிராக அவரின் குடும்பத்தார் புதன்கிழமை மனுச் செய்வர்.
“ஆர்சிஐ முடிவைப் புறந்தள்ள நீதிமுறை மேலாய்வு ஒன்றுக்கு உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்யப் போகிறோம்”, என்று தியோ குடும்ப வழக்குரைஞர் கோபிந்த் சிங் கூறினார்.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் பூங் தலைமையிலான அரச விசாரணைக் குழு, மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள் “முரட்டுத்தனமாகவும் இடைவிடாமலும் கொடூரமாகவும் நடத்திய விசாரணைகளால் தியோ தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்” என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையொன்றில் கூறியிருந்தது.
இந்த விசாரணை முடிவை நிராகரித்த தியோ குடும்பத்தார், தியோ கொலை செய்யப்பட்டார் என்றும் அதற்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் விடாப்பிடியாகக் கூறி வருகிறது.
அக்குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு எம்ஏசிசிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக சிவில் வழக்கு தொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
தியோவின் இறப்புக்குக் காரணமான எம்ஏசிசி அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்குமாறு பலதரப்புகளிலிருந்து அறைகூவல் வந்துள்ள போதிலும் சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகளையும் எம்ஏசி பணி இடைநீக்கம் மட்டுமே செய்தது. உள்விசாரணை நடப்பதாகவும் அது முடியும்வரை அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பர் என்று அது தெரிவித்தது.
அம்மூவர் தவிர்த்து வேறு யாரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று எம்ஏசிசி விசாரணை இயக்குனர் முஸ்டபார் அலி கூறினார். உள்விசாரணை எப்போது தொடங்கி எப்போது முடியும் என்றும் நிர்ணயிக்கப்படவில்லை.
அந்த உள்விசாரணை, நிர்வாக மற்றும் விசாரணை நடைமுறைகள்மீது மட்டுமே கவனம் செலுத்தும் என்றும் குற்றவியல் சார்ந்த விசாரணையைப் போலீசார் மேற்கொள்வர் என்றும் முஸ்டபார் கூறினார்.
ஆனால், சிலாங்கூர் போலீசார் அந்த அறிக்கையில் “அவர்கள் சட்டத்தை மீறி நடந்துகொண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை” என்பதால் விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
“அவர்கள் எம்ஏசிசி நடைமுறைகளைமீறி தியோவிடம் முரட்டுத்தனமாகவும் இடைவிடாமலும் கொடூரமாகவும் விசாரணை நடத்தினார்கள் என்பது ஆர்சிஐ-இன் முடிவு. ஆனால், அந்த அரசியல் உதவியாளரின் சாவில் கிரிமினல் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாக அதன் விசாரணை முடிவுகள் காண்பிக்கவில்லை”, என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா கூறியதாக மலாய் மெயில் செய்தியொன்று அறிவித்தது.
தியோ சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இயன் யோங் ஹியான் வா-வின் அரசியல் உதவியாளராக இருந்தார். ஷா ஆலம் பிளாசா மாசாமில் 14-வது மாடியில் உள்ள சிலாங்கூர் எம்ஏசிசி தலைமையகத்துக்குச் சாட்சியமளிக்கச் சென்ற அவர் இரவு நெடுநேர விசாரணைக்குப்பின் 2009 ஜூலை 16-இல், அக்கட்டிடத்தின் 5வது மாடியில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.