சிலாங்கூரில் பலாக்கொங் இடைத் தேர்தல், பாரிசான் நேசனலின் டான் சீ தியோங்குக்கும் பக்கத்தான் ஹரப்பானின் வொங் சியு கீ- க்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமைகிறது.
இன்று காலை மணி 9.20 அளவில் இரு வேட்பாளர்களும் அவர்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். வேட்பாளர் நியமனம் இடையூறு ஏதுமின்றிச் சுமூகமாக நடந்தேறியது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட ஹுலு லங்காட் மாவட்ட அலுவலகத்தில் இரு தரப்பு ஆதரவாளர்களும் கூடி இருந்தனர். மசீச ஆதரவாளர்கள் காலை 8 மணிக்கே வந்துவிட்டனர். டிஏபி ஆதரவாளர்கள் சற்றுத் தாமதமாக வந்தனர்.
இந்த இடைத் தேர்தலில் ஒரு புதிய விசயம் உண்டு. வேட்பாளர்களின் தேர்தல் சின்னம்தான் அது.
வொங் முதல்முறையாக ஹரப்பான் சின்னத்தில் போட்டியிடுகிறார். மே 9 பொதுத் தேர்தலில்கூட ஹரப்பான் சின்னம் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால் மே 9-க்குப் பின்னரே பக்கத்தான் ஹரப்பான் ஒரு கூட்டணியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
மசீச இதுவரை பயன்படுத்தி வந்த பிஎன் சின்னத்தைக் கைவிட்டு தனது சொந்த சின்னத்தில் களமிறங்குகிறது.
டிஏபியின் இங் தியன் சீ காலமானதை அடுத்து பலாக்கோங் சட்டமன்றத் தொகுதி காலியானது. 14வது பொதுத் தேர்தலில் இங் 35,538 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.