பக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம் மகிழ்ச்சியடையவில்லை

மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்), பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அதன் முதல் 100 நாள்களில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் திருப்திகரமாக செயல்படவில்லை எனக் கூறியுள்ளது.

அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் பொது கொள்கைகளில், மனித உரிமை தழுவல்கள் இல்லை அல்லது அவை வெளிப்படைத்தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை என சுஹாகாம் கூறியுள்ளது.

“அரசாங்க முயற்சிகள் அல்லது திட்டங்கள் அனைத்திலும், மனித உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் உறுதியாகக் கூறவில்லை. இது நாடாளுமன்றத்தின் சில தவறான கருத்துகளால் கூட இருக்கலாம்,” என சுஹாகாம் தலைவர் ரசாலி இஸ்மாயில் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அண்மையில், ஒரு குழந்தை திருமணத்தின் பிரச்சினையை, ஓர் அமைச்சரிடமிருந்து இன்னொரு அமைச்சருக்குக் கைமாற்றி, ஆனால் இதுவரை தீர்வு காணப்படாமலே இருக்கும் அரசாங்கத்தின் மோசமான கையாளுமை போலல்லாமல்; அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களும், ஒரு முக்கியப் பங்கை எடுத்து, மனித உரிமைகளைச் செயல்படுத்துவதில் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று சுஹாகாம் பரிந்துரைக்கிறது,” என அவர் கூறியுள்ளார்.

11 வயது தாய்லாந்து குழந்தையை, தனது மூன்றாவது மனைவியாக எடுத்துக் கொண்ட கிளாந்தான் ஆடவனை, உள்ளூர் அதிகாரிகள் இன்னும் கைது செய்யாமல் இருக்கின்றனர். அக்குழந்தைக்கு ஏழு வயது இருக்கும்போதிருந்தே, அவளை மணக்க விரும்பியதாக அந்த ஆடவன் கூறியிருந்தான்.