மகாதிர்: மனைவிக்கு வைரநகையைக் கடனுக்கு வாங்குவதற்கு ஒப்பானதுதான் இசிஆர்எல் திட்டம்

மனைவிக்கு வைர நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்படுவதும்   கிழக்குக் கரை இரயில் திட்டமும்  ஒன்றுதான்.   அங்கே  அது   கணவனைக்   கடனாளிக்கும்    இங்கு  அது நாட்டை கடனாளியாக்கி விடும்   என்று   எச்சரிக்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.

“மனைவிக்கு வைரநகை வாங்கிக்கொடுக்க ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அதற்குப் பணமில்லை. என்ன செய்வீர்கள்? கடன் பெற்று வைர மோதிரம் வாங்க நினைப்பீர்கள். அது வாழ்நாள் முழுக்கக் கடனாளியாக்கி விடும். அது புத்திசாலித்தனமல்ல.

“முந்தைய அரசாங்கம் கடன் வாங்கியது. பெருந் தொகையைக் கடன் வாங்கியது. பெரும் தொகையை வாங்கி உயர்ந்த வட்டியைச் செலுத்தியது.

“இசிஆர்எல் இரயிலாலோ அதிவேக இரயில் திட்டத்தாலோ நமக்கு ஆதாயம் இல்லை. அது நமக்குக் கட்டுப்படி ஆகாது.

“அத்திட்டத்தை மேற்கொள்வதால் கடனாளியாவோம் . நாடு பில்லியன் கணக்கில் கடன்வாங்கிய கடனாளியாகிவிடும்”. நேற்று பெய்ஜிங்கில், வெலிநாட்டில் வசிக்கும் மலேசியரிடையே பேசியபோது டாக்டர் மகாதிர் இவ்வாறு கூறினார்.

தேசிய கடன் ஒரு டிரில்லியன் ரிங்கிட்டைத் தாண்டிவிட்டது என்பதைக் கூட்டத்தாருக்கு நினைவூட்டிய பிரதமர், கடனைக் கட்டுவதற்கு அரசாங்கம் வரிகளை விதிக்காது, அதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றார்.

“கடன்களைக் குறைக்க வேண்டும். கடனைக் குறைப்பதற்கான ஒரு வழி திட்டத்தைக் கைவிடுவது அல்லது பணம் இருக்கும்போது செய்யலாம் எனத் திட்டத்தை ஒத்திவைப்பது.

“அதற்காகத்தான் சீன நிறுவனங்களுடனும் அரசாங்கத்துடனும் பேச்சு நடத்தி வருகிறோம்.

“இசிஆர்எல், அதிவேக இரயில் திட்டங்களை இரத்துச் செய்வதால் ரிம100 பில்லியன் மிச்சமாகும். இது ஏற்கனவே உள்ள கடனைக் குறைப்பதற்கு உதவும்”, என மகாதிர் கூறினார்.