‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில் முதன்மையான இடத்தில் நிதி அமைச்சு

அரசாங்க அமைப்புகளில் கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டியவை பற்றிய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது, டைம் ஸைனுடின் கருத்துப்படி, நிதி அமைச்சு.

அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேன்மக்கள் மன்றத்தின் தலைவர் டைம், இந்த பரிந்துரை கடந்த 100 நாள்களாக மேற்கொண்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.

இதில் முதல் இடத்தில் இருப்பது நிதி அமைச்சு. அது பணத்தைக் கொண்டுவர வேண்டும், நாட்டிற்கு வருமானத்தைக் கொண்டுவர வேண்டும். மேலும் செலவுகள் வீணாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்;

அங்கு ஊழல் இருக்கவே கூடாது என்று கோலாலம்பூரில் இன்று மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இப்போது லிம் குவான் எங் நிதி அமைச்சராக இருக்கிறார். அவர் இப்பதவியை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து ஏற்றுக்கொண்டார்.

எந்த மூன்று மிக உயர்ந்த அரசாங்க அமைப்புகள் அல்லது துறைகளில் சீர்திருத்தம் வேண்டும் என்று மேன்மக்கள் மன்றம் கண்டுள்ளது என்ற மலேசியாகினியின் கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் நிதி அமைச்சருமான டைம் இவ்வாறு கூறினார்.

மேலும், விளக்கம் ஏதும் அளிக்காமல், பொதுச் சேவையை அரசியலாக்காதீர்கள் என்று டைம் கூறினார்.

மேன்மக்கள் மன்றத்தின் பதவிக் காலம் நேற்றோடு முடிவுற்றது என்பதை டைமும் இதர மேன்மக்கள் மன்ற உறுப்பினர்களும் நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தனர்.