மலாய்க்காரர் மட்டுமே பிரதமராக இருக்க முடியும் என்பதை உறுதி செய்ய அரசமைப்பைத் திருத்துமாறு பிகேஆர் இளைஞர் பிரிவு அம்னோவுக்கு விடுத்துள்ள சவாலை டிஏபி இளைஞர் பிரிவு குறை கூறியுள்ளது.
பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் விடுத்துள்ள அந்த சவால் ‘இனவாத’ தன்மையைக் கொண்டது. புத்ராஜெயாவை பிஎன் -னிடமிருந்து கைப்பற்றும் பக்காத்தான் ராக்யாட் முயற்சிகளைப் பாதிக்கும் என டிஏபி இளைஞர் தலைவர் அந்தோனி லோக் சொன்னார்.
“சம்சுல் தெரிவித்த இனவாதக் கருத்து மீது நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். ஏனெனில் அவரது இளைஞர் பிரிவு பிகேஆர்-ரில் பல இனக் கோட்பாட்டை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது.”
“இந்த நாட்டில் இனவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர பிகேஆர் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த முயற்சிகள் அனைத்தும் அந்த கவனக்குறைவான இனவாதக் கருத்தினால் வீணாகி விடும்”, என்று லோக் விடுத்த அறிக்கை கூறியது.
பிஎன் உறுப்புக் கட்சிகள் சம்சுல் உரையை எடுத்துக் கொண்டு பிகேஆர் ஒர் இனவாதக் கட்சி என குற்றஞ்சாட்ட முயலும் என்றும் அவர் கருதுகிறார்.
“நடப்பு அரசியல் உண்மை நிலையில் மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராவதற்கு காலம் கனியாமல் இருக்கலாம். ஆனால் மலாய்க்காரர் மட்டுமே பிரதமராவதற்கு அரசமைப்பை திருத்துவதற்கு காரணமே இல்லை.”
“இது பின்னோக்கிச் செல்வதாகும். நாங்கள் அந்த நிலையை முழுமையாக எதிர்க்கிறோம்”, என அவர் மேலும் சொன்னார்.
என்றாலும் சம்சுல் கருத்து பக்காத்தானுடைய கூட்டு நிலையை பிரதிநிதிக்கவில்லை என்றார் அவர். காரணம் பக்காத்தான் தகுதி அடிப்படைக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறது.
சம்சுல் அம்னோவுக்கு விடுத்த சவால்
“அத்துடன் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்றினால் நடப்பு அரசமைப்பைப் பின்பற்றப் போவதாகவும் பக்காத்தான் அறிவித்துள்ளது. ஆகவே பக்காத்தான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட விஷயத்துக்கு மாறாகவும் சம்சுல் கருத்து அமைந்துள்ளது.”
மலாய்க்காரர்களுக்குப் போராடுவதாக தான் கூறிக் கொள்வதை மெய்பிப்பதற்கு அரசமைப்பைத் திருத்துமாறு சம்சுல் நேற்று அம்னோவுக்குச் சவால் விடுத்தார்.
பிரதமர் பதவியை மலாய்க்காரர் மட்டுமே வகிக்க முடியும் என்பது, மலாய்க்காரர்களுக்கு மட்டுமின்றி அனத்து மலேசியர்களுக்கும் நியாயமானதாக இருக்கும் என அந்த பிகேஆர் இளைஞர் தலைவர் சொன்னார். மக்கள் தொகை அடிப்படையில் மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராகப் பொறுப்பேற்பது நியாயமாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்றாலும் கூட்டரசு அரசமைப்பின் நடப்பு விதிகளை பிகேஆர் இளைஞர் பிரிவு ஏற்றுக் கொள்வதாக சம்சுல் குறிப்பிட்டார்.
“மலாய்க்காரர்களுக்கு தாங்கள் உண்மையில் போராடுவதை மெய்பிப்பதற்கு அம்னோ அவ்வாறு செய்ய வேண்டும் எனத் நாங்கள் சவால் விடுத்தோம்”, என்றார் அவர்.