பிகேஆர்: இம்முறை சிறந்த வேட்பாளர்களே களம் இறக்கப்படுவர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்சித்தாவி மானக்கேட்டை உண்டாக்கியதை மறவாத பிகேஆர், அடுத்துவரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதில் உறுதியாக இருக்கிறது.

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், இன்று ஜொகூர், கூலாயில் பிகேஆரின் எட்டாவது தேசிய காங்கிரசில் கொள்கை உரையாற்றியபோது இதை வலியுறுத்தினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களில் சிலர், “திறமை குறைந்தவர்களாக இருப்பதும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் சிறப்பாக செயல்படாததும்  மக்களுக்குச் சேவையாற்றாததும்”தலைமைத்துவத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாரவர்.

 “வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தொகுதிகளுடனும் அடிநிலை உறுப்பினர்களுடனும் கலந்து ஆலோசிக்கப்படும் என உறுதி கூறுகிறேன்.

“(வேட்பாளர்கள்) தகுதியானவர்களாகவும், கொள்கைப்பற்று உடையவர்களாகவும், எதிரிகள் கொடுக்க முன்வரும் மில்லியன் கணக்கான ரிங்கிட்டில் மதிமயங்காதவர்களாகவும் இருத்தல் வேண்டும்”, என்றாரவர்.

2008-இலிருந்து பலர் கட்சியைவிட்டு வெளியேறிச் சென்றதால் பிகேஆர் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானது.

கட்சிவைவிட்டு ஓடியவர்களில் கூலிம்-பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நூர்டினும் ஒருவர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது சுயேச்சை எம்பி-களின் கூட்டத்தில் ஒருவராக இருந்துகொண்டு சமயம் வாய்க்கும்போதெல்லாம் தம் முன்னாள் கட்சியைச் சாடிவருகிறார்.

தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை ஊழல்கள் நிகழ்வதற்குச் சான்று பகர்கின்றது என்று வான் அசீசா குறிப்பிட்டார்.2008ஆம் அறிக்கை ரிம28பில்லியன் அளவுக்கு ஊழல்கள் நிகழ்திருப்பதாகக் கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்பெல்லாம் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு நல்ல வேலையும் கிடைத்தது வாழ்க்கையும் கிடைத்தது.இப்போது அவர்கள் கடன் தொல்லைகளில் சிக்கிகொள்கிறார்கள், வேலையும் கிடைப்பதில்லை என்றவர் வருத்தப்பட்டார்.

“இதற்கு மக்கள் காரணம் அல்ல”.  அரசாங்கமே முழுப் பொறுப்பு என்பதை வான் அசீசா வலியுறுத்தினார்.

சமவாய்ப்புகளில் நம்பிக்கை

பக்காத்தான் ரக்யாட்டின் 2012 ஆம் ஆண்டு நிழல் பட்ஜெட் பற்றிக் குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் சமவாய்ப்புகள் என்பதில் பிகேஆர் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாய்க் கூறினார்.

நேற்று பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டார் முகம்மட் அகின், அரசமைப்பில் திருத்தம்  செய்து மலாய்க்காரர் ஒருவரே பிரதமர் ஆக முடியும் என்பதை உறுதிப்படுத்தும் துணிச்சல் அம்னோவுக்கு உண்டா என்று சவால் விடுத்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார். ஆனால், பிகேஆர் தலைவரின் உரை பல்லின தன்மையை வலியுறுத்தியது.

“மலாய்க்காரர்களாலும் பூமிபுத்ராக்களாலும் வழிநடத்தப்படும் ஒரு கட்சி, முதல் முறையாக, இன, சமய வேறுபாடின்றி மலேசியர் அனைவருக்காகவும் போராடுகிறது”, என்றாரவர்.

இன்றைய பிகேஆர் காங்கிரசுக்கு டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பாஸ் உதவித் தலைவர் சாலாஹுடின், பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் முதலானோர் வந்திருந்தனர்.

பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தை நடத்த ஜோகூரில் இடம் கிடைப்பதே சிரமமாக இருந்தது. இதை பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தம் தொடக்கவுரையில் தெரிவித்தார்.

“தங்குவிடுதிகளில் கேட்டுப்பார்த்தோம். இடம் கொடுக்கவே பயந்தார்கள். சீனப் பள்ளி மண்டபங்கள்கூட கிடைக்கவில்லை…ஜோகூர் பிஎன்னின் கோட்டை அல்லவா,” என்று குத்தலாகக் குறிப்பிட்டார்.

முடிவில், பூலாய் ஸ்ப்ரிங்ஸ் ஓய்வுத்தலம் மட்டுமே இடம் அளிக்க ஒப்புக்கொண்டது என்றாரவர்.