“வீணான” இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து பாஸ் போட்டியிடக் கூடும்

 

அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்காக ஓர் இடைத் தேர்தலை உருவாக்கும் திட்டத்தை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இன்று குறைகூறினார்.

அன்வாருக்காக ஒரு நாடாளுமன்ற இருக்கை வேண்டுமென்றே காலி செய்யப்பட்டால், பாஸ் பிகேஆர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அன்வாரை எதிர்த்துப் போட்டியிடக் கூடும் என்றாரவர்.

எந்த இருக்கை காலி செய்யப்படும் என்பதைப் பார்ப்போம். அந்த இருக்கையில் பாஸ் வெற்றிபெரும் வாய்ப்பு இருக்குமானால், பாஸ் போட்டியிடும் என்று அவர் கூறினார்.

அவர் போட்டியிடக்கூடிய தொகுதி பெர்மாத்தாங் பாவ் அல்லது சுங்கைப் பட்டானியாக இருக்கக்கூடும் என்ற வதந்திகள் இருக்கின்றன. ஆனால், இப்போதைக்கு அவை வதந்திகள். நாங்கள் தயார் என்று அவர் இன்று அம்பாங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மக்கள் அளித்துள்ள அதிகாரத்தை அவ்வளவு சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர் அன்வாருக்கு வழி விடுவதற்காக இராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கக்கூடாது என்று துவான் இப்ராகிம் கூறினார்.

இன்னொரு இடைத் தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டால், இலட்சக்கணக்கான மக்களின் வரிப்பணம் செலவிடப்பட வேண்டியிருக்கும் என்று கூறிய இப்ராகிம், இது ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.