எச்ஆர்பி:ஆலயம் உடைக்கப்பட்டதற்கு விளக்கம் தேவை

ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையேல் அவரது அலுவலகத்துக்கு வெளியில் எச்ஆர்பி கண்டனக் கூட்டம் நடத்தும். எச்ஆபி மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.தியாகராஜன் நேற்று மலேசியாகினியிடம் இதனைத் தெரிவித்தார்.

“எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்கள் நிலையை எண்ணிப்பார்ப்பார் யாருமில்லை.”

வேறு சில கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். ஆலயம் இருந்த இடத்திலேயே அதற்கு ஒரு ஏக்கர் நிலம் நிலப்பட்டாவுடன் கொடுக்கப்பட வேண்டும், அவ்வாறே மாநிலத்தில் உள்ள மற்ற கோயில்களுக்கும் நிலம் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதையும்  உறுதிப்படுத்த வேண்டும்.

மாநில அரசின் நடவடிக்கை அரசமைப்பின் பகுதி 11, சமய உரிமைக்கு அளிக்கும் உத்தரவாதத்தை மீறுவதாக தியாகராஜன் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஆலயம் உடைபட்டதை நேரில் கண்டவரான ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயக் குழு உறுப்பினர் ஏ.மனோமோகன், நேற்று நண்பகல் வாக்கில் சுமார் பத்து வாகனங்களில் 30 போலீசாரும் அமலாக்க அதிகாரிகளும் வந்திறங்கியதாகக் கூறினார்.

பின்னர் அவர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி 25-ஆண்டுகள்-பழமையான அந்த ஆலயத்தை உடைக்கத்தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் அதில் ஈடுபட்டனர்.

“சிலைகள், சட்டங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்தனர்”, என்று மனோமோகன்  தெரிவித்தார்.

சேவியர்: முறைப்படி தெரிவிக்கப்பட்டது

முன் அறிவிப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுவதை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் மறுத்தார். ஆலய நிர்வாகிகளுக்கு பலமுறை அறிவிக்கைகள் அனுப்பப்பட்டதாக அவர் சொன்னார்.

“உரியவர்களுக்கு பலமுறை தெரிவித்திருந்தோம். அவர்களும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் ஆலயத்தை அகற்றத்தான்  வேண்டும் என்பதை அறிந்தே வைத்திருந்தார்கள்”, என்று சேவியர் நேற்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது கூறினார்.

“பலமுறை அறிவிக்கைகள் அனுப்பப்பட்டன என்று உறுதியாகக் கூறுவேன். அத்துடன் அவர்களுடன் கலந்து பேசியும் இருக்கிறோம்.”

ஆலயம், சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருப்பதால் சட்டவிரோதமானது  என்றவர் கூறினார்.

ஆலயத்தைக் கட்டியவர்கள், அதைக் கட்டுவதற்குமுன் அந்த நிலம் எதற்கு ஒதுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்திருக்க வேண்டும். அதைச் செய்யாதது அவர்களின் குற்றம்தான் என்று சேவியர் குறிப்பிட்டார்.

TAGS: